இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று முதல் முறையாக சிங்கள அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிவடைந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், அந்த பகுதிகளில் உள்ள மக்கள் ஏராளமானோர் இன்னமும் முள்கம்பி முகாம்களுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
போரின்போது, தமிழர்களின் குடியிருப்புகள் மீது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கொத்துக் குண்டுகளை பொதுமக்கள் வசித்த பகுதிகளில் வீசியதாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை போர் விதிமுறைகளை மீறி மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக் கொன்றதாகவும், பெண்கள் பலரை கற்பழித்து கொலை செய்ததாகவும் தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், தமிழர்களை நிர்வாணமாக்கி அவர்களுடைய கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லும் காட்சிகளை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அந்த தொலைக்காட்சி மேலும், பல போர்க்குற்ற ஆதாரங்களையும் வெளியிட்டு சிங்கள அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் சிங்கள அரசு தொடர்ச்சியாக மறுத்து வந்தது. இந்த நிலையில், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை: உண்மை பகுப்பாய்வு'' என்ற பெயரில் 02.08.2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான். விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அறிக்கையை பாதுகாப்பு மந்திரியும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயா ராஜபக்சே வெளியிட்டு பேசுகையில் கூறியதாவது:
போர் நடைபெற்ற பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுத்தது. அந்த பகுதிகளில் பாதுகாப்பான தாழ்வாரங்களை அமைத்து, பொதுமக்கள் சார்பில் உயிரிழப்பு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கொள்கை அடிப்படையில் வீரர்களுக்கு தகுந்த உத்தரவுகள் வழங்கப்பட்டது. இருப்பினும், விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் போது, பொதுமக்களுடைய இறப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. .போரின் போது 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை. வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதைக் கணக்கிடுவது மிகக் கடினம்.
இலங்கையில் போர் முடிந்து விட்டபோதிலும், விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்பு இன்று வரை அப்படியேதான் இருக்கிறது. இலங்கை அரசை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.நா.,வின் இலங்கை போர்க்குற்ற அறிக்கையில், "சரண் அடைய வந்த விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதிப் பிரிவுச் செயலர் புலித்தேவன் இருவரையும், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக' தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசின் தற்போதைய அறிக்கையை வெளியிட்டுப் பேசிய கோத்தபய இதுகுறித்துக் கூறியதாவது: உறுதிமொழி அளிக்கப்பட்டனவோ இல்லையோ, 11 ஆயிரம் விடுதலைப் புலிகள், சரண் அடைந்தனர். அவர்கள் சமூகத்தோடு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நடேசனும், புலித்தேவனும் சரண் அடையப் போகின்றனர் என்பது பற்றி, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு யாரும் தெரிவிக்கவில்லை. அப்போது, ராணுவச் செயலராக இருந்த என்னையும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இறுதிப்போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருப்பது, பன்னாட்டு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ராஜபக்சே நடத்தும் நாடகம் என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment