இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையில் இந்திய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் 01.08.2011 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா சில கருத்துக்களை பேசி தனது எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் திருச்சி சிவா பேசியதாவது :
60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் சிங்களர்களின் எண்ணிக்கை 65 லட்சமாகவும், தமிழர்களின் எண்ணிக்கை 35 லட்சமாகவும் இருந்தது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்களர்களின் எண்ணிக்கை 11/2 கோடியாக உயர்ந்திருக்கிற போது, தமிழர்களின் எண்ணிக்கை அதே 35 லட்சத்தில் இருக்கிறது. தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கவில்லை என்பதல்ல காரணம். தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களை திட்டமிட்டு கொன்று குவித்து வருவதுதான் காரணம். குறிப்பாக உள்நாட்டுப் போரை ஒடுக்குகிறேன் என்கிற பெயரால், ராஜபக்சே அரசு ராணுவத்தினரின் துணையுடன் இரக்கமின்றி மனிதாபிமானமற்ற தன்மையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்துச் சிதைத்த கொடுமைகளை யாராலும் மறக்க முடியாது.
ராஜபக்சே அரசின் இரக்கமற்ற இந்த அனுகுமுறைகளால், லட்சக்கணக்கான தமிழர்கள் குடியிருக்கின்ற இடங்களை இழந்து, சொத்துக்களையும் இழந்து வேறு இடத்திற்கு குடி பெயர வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இன்னமும், லட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசினால் தரப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவும், இலங்கையில் மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடந்திருக்கின்றன என்று உறுதிபடுத்தியிருக்கிறது.
இப்போது வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, தமிழினத்தை அழித்து விட கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசின் உணர்வுகளை பிரதிபலிக்கும் குழு. இலங்கையில் நடைபெறுகின்ற வன்முறை, மனித உரிமை மீறல்கள், அடக்குமுறை தமிழர்களை அழிக்கும் முயற்சி இவற்றைக் கண்டித்து தமிழினத்தின் மீது வெறுப்புணர்வு காட்டும் இவர்களோடு நட்பு பாராட்ட முடியாது என்கிற கருத்தை வலியுறுத்தி நான் வெளிநடப்பு செய்கிறேன். இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
No comments:
Post a Comment