தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசின் 2011-2012-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை நாங்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிப்பதற்கு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை பயன்பட வேண்டும் என்று கூறினோம். வேலை வாய்ப்பு பெருக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இந்திய சராசரியைவிட குறைவாகவே இருந்தது. பதினோராம் ஐந்தாண்டு திட்டத்தில் 9 சதவீத வளர்ச்சி என்று திட்டமிட்டு இருந்தாலும், 7.8 சதவீத வளர்ச்சிதான் காணப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் 10 சதவீதத்திற்கு மேலாக பொருளாதார வளர்ச்சி காணப்படும் என்றும், அதற்கென விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்குமானால் வேலைவாய்ப்பு பெருகும் என்பதால் தே.மு.தி.க. இதை வரவேற்கிறது. வரிகளே போடக்கூடாது என்பதல்ல. வசதியுள்ளவர்களுக்கு வரியைப் போட்டு, வறியவர்களுக்கு வசதி செய்வதுதான் ஒரு முற்போக்கான அரசின் கடமை என்று அண்ணா கூறினார். அந்த வகையிலேயே இன்றைய தமிழக அரசின் வரி விதிப்பு கொள்கை அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் இன்றைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து, அந்த குறைகளைத் தீர்க்க என்னென்ன திட்டங்கள் தேவையோ, அவையெல்லாம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதால் தே.மு.தி.க. சார்பில் நான் இந்த நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை அதிக பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. ஆனால், அதில் சொல்லிக்கொள்ளும்படியாக திட்டங்கள் எதுவும் இல்லை. மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க ஊக்கத் தொகை வழங்குவதும், அதிக சீருடைகளை வழங்குவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர ஆசிரியர்களை அமர்த்துவது குறித்தோ அல்லது பள்ளிகளை தரம் உயர்த்துவது குறித்தோ நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரம் நிதிநிலை அறிக்கையில் இல்லாததை பார்க்கும்போது, எதையோ மறைக்க அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. மொத்தத்தில் ஒரு சில திட்டங்களைத் தவிர, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பட்ஜெட்டில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களோடு இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் அதற்கு வாழ்த்துத் தெரிவித்த எனது செய்தியில் மத்திய அரசோடு, மாநில அரசுகள் இணக்கத்தோடு இருந்து செயல்பட்டால் தான் மாநிலத்தின் வளர்ச்சி சிறப்பாக வெற்றி பெறும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அவ்வழியில் இன்றைக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கான பணிகள் தெளிவான நிலையில் செல்லத் தொடங்கியிருக்கிறது என்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு தங்கபாலு அறிக்கையில் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன. தொலைதூர கிராமங்கள் பயன்பெறுவதற்கு நடமாடும் மருத்துவமனைகள், பொதுக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துதல் போன்றவை மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியவை ஆகும். கம்பிவடத் தொலைக்காட்சி சேவையை அரசு உடைமை ஆக்குதல், மீனவர் நலத்திட்டங்கள் ஆகிய வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், இன்றியமையாத மக்கள் பிரச்சினைகளில் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது.
சமச்சீர் கல்வி பிரச்சினையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோபமும் அ.தி.மு.க. அரசின் மீது திரும்பி உள்ளதை முதல்வர் உணரவில்லை. சமச்சீர் கல்வி குறித்து அரசின் வீண்பிடிவாதம் தொடருவதையே நிதிநிலை அறிக்கை காட்டுகிறது. இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார். புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடன்தொகையை செலுத்திய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.3 ஆயிரம் கோடி, சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம், பண்ணை கருவிகள், இயந்திரங்கள் வாங்க மானியத்துடன் கடன் உதவி என விவசாயிகளின் வாழ்வு மேம்பட அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்களை வரவேற்கிறேன் என்று கூறி உள்ளார்.
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதிநிலை அறிக்கையில், ஜெயலலிதா அரசு தமிழ்நாட்டில் கடைசி படிக்கட்டில் காத்திருக்கிற கடைக்கோடி குடிமக்களையும் கை தூக்கி விடுகிற மக்கள் நலம் காக்கும் அரசு என்பதை நிரூபிக்கிறது. காழ்ப்புணர்ச்சியையே கண்ணாடியாக அணிந்து கொண்டு எதைக் குறை சொல்ல முடியும்? என்று ஏங்கித் தவிக்கிற எதிர்கட்சிகள் கூட வாய் திறக்க முடியாத மக்களுக்கான ஒரு வரபிரசாதமாய் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துக்களை மீட்டு நிர்வாகத்தை சீரமைத்து வக்பு வாரியத்திற்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த முடிவு செய்துள்ளதை வரவேற்று பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு ஊழியர்கள், வணிகர்கள், பாட்டாளி விவசாயிகள் முதல் பாமரர்கள் வரை பாராட்டும் பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கும் விதமான அறிவிப்புகளுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்றவற்றை இந்திய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. மொத்தத்தில் தமிழக அரசு 1 லட்சம் கோடி கடன் சுமைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலிலும், தமிழக முதல்-அமைச்சரால் தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் வெகுவாக பாராட்டுக்குறியது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என்றும், சட்டமன்ற கூட்டத்தில் துறைவாரியாக மானியக்கோரிக்கைகள் வரும் நேரத்தில் வணிகர்களின் கோரிக்கைகள் அரசால் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் வணிகர்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் ஜெயலலிதா உறுதி அளித்தவாறு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எதையும் வழங்காமல் அரசு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு பட்ஜெட்டை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு மாநில தலைவர் மு.வரதராஜன், கோவில் பூசாரிகள் நல சங்க தலைவர் பி.வாசு, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் செல்வக்குமார், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கனகாம்பரம், தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநிலத்தலைவர் விஜயபாண்டியன்,
அண்ணா ஆசிரியர் நலக்கூட்டணி அமைப்பின் மாநில பொருளாளர் பொன்.அரங்கநாதன், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்க தலைவர் சின்னராஜ், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் செல்வம், சிறுதொழில்கள், வணிக முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகர், தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்,
தமிழ்நாடு தலைமைச்செயலக சங்க தலைவர் மு.சுந்தரராஜன், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் பி.எஸ்.சவுந்தரபாண்டியன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன், தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் எட்வட் ஜெயசீலன், பொதுச்செயலாளர் பழனிவேல், தமிழ்நாடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன், ஆந்திர வர்த்தக சபை தலைவர் கைலாஷ்மல் துகார், செயலாளர் பி.நந்தகோபால் உள்பட பலர் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment