தை மாதத்தின் முதல் நாள்தான் தமிழ் ஆண்டு தொடக்க நாள் என்பது 500 தமிழ் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு என்று, கலைஞர் கூறினார்.
முன்பு தி.மு.க. அரசு தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து, அதை சட்டமாகவும் இயற்றி நடைமுறைப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு பதிலாக சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கும் வகையில், 23.08.2011 அன்று அ.தி.மு.க. அரசு சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியது.
இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க.தலைவர் கலைஞரை 23.08.2011 அன்று நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:
நிருபர் கேள்வி: தை'முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு சட்டதிருத்தம் கொண்டு வந்திருக்கிறதே?
பதில்: மறைமலையடிகள் தலைமையில் 1921 ம் ஆண்டு 500 புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான். திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.
அந்த 500 தமிழ்ப்புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் தி.மு.க.ஆட்சி, தை முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டித்தான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம்.
கேள்வி: தி.மு.க.அரசின் சட்டத்தை ரத்து செய்து அ.தி.மு.க.அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய இரு கம்ழூனிஸ்டு கட்சிகளும் அதை எதிர்த்திருக்கிறார்களே?
பதில்: அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
No comments:
Post a Comment