அ.தி.மு.க. பதவி பொறுப்பேற்ற நாள் முதல் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகிய வற்றை தொடர்ந்து இன்று முதல் வரலாறு காணாத அளவுக்கு 37 சதவீத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஏப்ரல் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 9ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்டங்களின் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கூறியதாவது-
இந்த மின் கட்டண உயர்வை நடுத்தர குடும்பங்களால் தாங்க முடியாது. அதுமட்டுமின்றி, தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்வு இவ்வளவு அதிகமாக ஏற்பட்டதில்லை.
கழக ஆட்சியில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தவர்களுக்குக் கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 75 காசு என்ற அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கழக ஆட்சியில் வாங்கும் சக்தி ஓரளவிற்கே பெற்றுள்ள சாதாரண நுகர்வோருக்கு எவ்விதக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் சகட்டு மேனிக்கு ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தினர், வசதி படைத்தோர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் 5,300 கோடி ரூபாயும், வசதி படைத்தோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 2,574 கோடியும் கூடுதலாக அரசுக்குக் கிடைக்கத்தக்க வகையில் கட்டண உயர்வைச் செய்திருக்கிறார்கள். என்ன சமதர்மமோ இது?
இந்த மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment