மாநிலத்தில் மின்சாரமே இல்லை. இதில் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது என்ன நியாயம்? கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வு குறித்து தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்ன முதலமைச்சர் கடந்த காலத்தில் மூன்று மணிநேரம் மின்வெட்டு என்பதற்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தினார்.
ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு நேரம் என்பதுபோய், மின்சாரமே இல்லை என்ற நிலைதான் உள்ளது. மின்சாரத்தை கொடுத்துவிட்டு, சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தந்து மின்சாரக் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்தினால் கூட சமாளிக்கலாம். ஆனால் இன்று சம்பாதிக்க வழியும் இல்லை. அதே நேரத்தில் கொஞ்சம், நஞ்சம் தரும் மின்சாரத்திற்கு இருமடங்கு கூடுதல் கட்டணம் கட்டுங்கள் என்று கேட்பது என்ன நியாயம்?
விவசாயத்தையும், தொழில் துறையையும் இந்த மின் கட்டண உயர்வு அதலபாதாளத்திற்கு இட்டு செல்லக் கூடிய நிலையையே உருவாக்கியுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுகின்ற கடும் இழப்பை ஈடு செய்வதற்கு பதிலாக வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதைப் போல், மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். அத்தோடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலை கண்டு விவசாயத்தையே கைவிட்டு விடக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தமிழக மக்களுக்கு சோதனை காலம் போலும். ஏற்கனவே உயர்ந்து வரும் விலைவாசி, வரலாறு காணாத பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, பத்திரப் பதிவுக்கான நில வழிகாட்டி மதிப்பு கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வினால் விழி பிதுங்கி இருக்கும் நிலையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பெரும் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது.
இதைத்தான் பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்றனர் போலும். இந்த அவலச் சூழ்நிலையை கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சரியா சொல்லி இருக்கார் தலிவரு
ReplyDelete