தலைநகர் டெல்லியில் தற்போது ஒரு புதிய செய்தி படு வேகமாக சுழன்றடிக்க ஆரம்பித்துள்ளது. அது பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் இருக்க மாட்டார் என்றும், ராகுல் காந்திதான் அடுத்து பிரதமராகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்துவதென்று சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாகவும் அந்த செய்தி பரபரப்பாக கூறுகிறது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக முக்கிய தேர்தலாக குடியரசுத் தலைவர் தேர்தல் வரவுள்ளது. இதனால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், விவாதங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை காங்கிரஸ் நிறுத்தும் என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க வேட்பாளரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாக லேட்டஸ்ட் செய்திகள் கூறுகின்றன. அவர் வேறு யாருமல்ல, தற்போது பிரதமராக இருக்கிற, ஏகப்பட்ட சர்ச்சைகளை தனது டர்பனுக்குள்ளும், தாடிக்குள்ளும் புதைத்து வைத்துக் கொண்டு புன்னகை தவழ காட்சி தரும் மன்மோகன் சிங்தான்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு மன்மோகன் சிங்கைத்தான் சோனியா காந்தி நிறுத்தப் போகிறாராம். இதை அவரே மன்மோகன் சிங்கிடமும் தெரிவித்து விட்டாராம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று கேட்கலாம். சில நாட்களுக்கு முன்புதான் சோனியாவும், மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசி இந்த விஷயத்தைப் பேசி முடிவு செய்தனராம்.
உண்மையில் சோனியா காந்தியை, மன்மோகன் சிங் சந்தித்துப் பேசியது வேறு ஒரு காரணத்திற்காகவாம். அதாவது நான் ராஜினாமா செய்யப் போகிறேன், என்னை தயவு செய்து விடுவியுங்கள் என்று கூறத்தான் சோனியாவை சந்தித்தாராம் மன்மோகன்.
ராணுவத் தளபதி வி.கே.சிங் விவகாரம் மன்மோகன் சிங்கை கடுமையாக பாதித்துள்ளதாம். அது போக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளும், பல்வேறு பிரச்சினைகளும் கூட அவரை கடும் அப்செட்டுக்குள்ளாக்கியுள்ளனவாம். இதனால் தான் பதவி விலக விரும்புவதாக கூறினாராம் மன்மோகன் சிங்.
அதை மறுத்துப் பேசவில்லையாம் சோனியாவும். ஆனால் இந்தக் காரணத்திற்காக நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம், உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு போக நான் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சோனியா. அது என்ன என்று பிரதமர் கேட்டபோது, உங்களைத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப் போகிறோம் என்று கூறினார் சோனியா என்கிறார்கள்.
இதற்கு மன்மோகன் சிங்கும் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் வரை பதவியில் தொடருங்கள், பின்னர் விலகலாம் என்று சோனியா கேட்டுக் கொண்டாராம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டாராம்.
எனவே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் பிரதமர் பதவி விலகலாம். அப்படியானால் அடுத்த பிரதமர் யார் என்று கேட்கலாம். அதற்குக்தானே பட்டை தீட்டி வைத்திருக்கிறார்கள் ராகுல் காந்தியை. அவரைத்தான் பிரதமராக்கப் போகிறார்களாம்.
வேறு ஒரு தாத்தாவை பிரதமராக்குவதற்குப் பதில் இளம் தலைவராக வலம் வரும், ராகுல் காந்தியை பிரதமராக்கி விடலாம் என்ற முடிவுக்கு கட்சியின் பிற ஜால்ராத் தலைவர்களைப் போலவே சோனியா காந்தியும் யோசிப்பதாக தெரிகிறது. எனவே மன்மோகன் சிங் விலகியதும், ராகுல் காந்தியை பிரதமர் பதவியில் அமர்த்தும் திட்டத்தை வைத்துள்ளாராம் சோனியா.
இதுதான் டெல்லியை உலா வந்து கொண்டுள்ள சூடான செய்தி. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதில் ஒன்று நடக்கும் - அதாவது மன்மோகன் சிங் குடியரசுத் தலைவராவது அல்லது ராகுல் காந்தி பிரதமராவது - என்று அடித்துக் கூறுகிறார்கள்.
பொறுத்திருந்துதான் பார்ப்போமே...!
No comments:
Post a Comment