அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்தாகி விட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் வந்து சேர்ந்தார் சசிகலா. அவருடன் இளவரசியும் வந்து சேர்ந்து விட்டார். இதையடுத்து மறுபடியும் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவின் நட்பு தழைத்தோங்கத் தோ்ன்றி விட்டது.
தனக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றம் சாட்டி கடந்த டிசம்பர் 19ம் தேதி சசிகலாவையும், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அதிரடியாக அதிமுகவிலிருந்து நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. சசிகலா போயஸ் தோட்ட வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டார். மேலும் நடராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பாய்ந்தன. அதில் நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சசிகலா குடும்பத்தினர் நீக்கத்தால் அதிமுகவினர் சந்தோஷப்பட்டனர், அதிமுகவைப் பிடித்த சனி விலகியது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூட மறைமுகமாக கூறியிரு்ந்தார். அதிமுகவினர் மொட்டை அடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் தற்போது அத்தனை மகிழ்ச்சியையும் தூக்கிப் போட்டு உடைத்து விட்டார்கள் ஜெயலலிதாவும், சசிகலாவும்.
அதாவது கடந்த 28ம் தேதி சசிகலா ஒரு உருக்கமான அறிக்கையை விட்டார். அதில் அக்கா, அக்கா எனறு ஜெயலலிதாவை பாசத்துடன் அழைத்திருந்தார். அக்கா ஜெயலலிதாவுக்கு எதிரிகள் எனக்கும் எதிரிகளே என்று கூறியிருந்தார். தனது குடும்பத்தினரை உதறி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சசிகலாவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார். இரு சகோதரிகளும் இப்படி அறிக்கை விட்டு தங்களது கோபதாபங்களை சரி செய்து கொண்டு விட்டனர்.
இதையடுத்து நேற்று மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார் சசிகலா. இதன் மூலம் 24 ஆண்டுகள் ஒரே வீட்டில் வாழ்ந்து, இடையில் விட்டுப் போன உறவு மீண்டும் துளிர்த்தது.
நேற்று மாலையில் வீட்டுக்கு வந்தார் சசிகலா. அவருடன் அண்ணி இளவரசியும் வந்து சேர்ந்தார். இதையடுத்து போயஸ் தோட்ட வீடு களை கட்ட ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment