நடிப்பில் உன்னதம் பார்க்கும் கலைஞன். விக்ரமின் திசை தேடும் பயணம் இப்போது 'தாண்டவம்' வரைக்கும் நீண்டிருக்கிறது. விக்ரமின் பர்சனல் பக்கங்கள் இதோ...
* விக்ரமுக்கு மிகவும் உயிரான பாடல், 'பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை'. தினமும் ஒரு தடவையாவது டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் கேட்டுவிட்டுத்தான் தூங்குவார்!
* வெளியூர் படப்பிடிப்புக்குப் போனால், அந்தந்த வட்டார ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர்களோடு இரண்டு மணி நேரமாவது இருந்து பேசி விட்டு, ஒரு காபியாவது குடித்துவிட்டுத்தான் வருவார்!
* பள்ளிப் படிப்பு முழுவதும் ஏற்காடு மாண்ட்ஃபோர்டு ஸ்கூலில். அதனால் ஆங்கில நாடகங்களில் நிறைய நடித்த அனுபவமும் உண்டு. காலேஜ்... தமிழ் ஹீரோக்களைத் தயாரிக்கும் லயோலா!
* போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். விருந்தினர்களை, நண்பர்களை புகைப்படம் எடுத்து பிரின்ட் போட்டுத் தந்து அசத்துவார்.
* எப்பவும் பிடித்த கலர் கறுப்பு. கார்களின் வண்ணமும் அதுதான். மிகவும் வேண்டிய விழாக்களுக்குச் செல்லும்போது, அதற்கு மிகவும் தகுந்த மாதிரி யோசித்துத்தான் உடைகள் அணிவார்!
* பண்ணைத் தோட்டத்தில் காட்டுப் பூனை, வாத்து, வான்கோழி, நண்டுகள் என வெரைட்டியாக, ஆசை ஆசையாக வளர்க்கிறார். விடுமுறை கிடைத்தால், தோட்டத்துக்குக் குடும்பத்தோடு பறந்துவிடுவார்!
* இரண்டு செல்போன்கள் வைத்திருக்கிறார். அவ்வளவு நண்பர்கள். அத்தனை பேருக்கும் ஞாபகம்வைத்துப் பதில் அளிப்பார்!
* நகைகளின் மீது ஆர்வமே இல்லை. அதிசயமாய் என்றைக்காவது அடையாளமே தெரியாமல் மெல்லிசாய் தங்கச் சங்கிலி மின்னும். மிகவும் வேண்டிய ஒருவர் பரிசளித்த கல் மோதிரம் மட்டும் விரலில் இருக்கும்!
* எப்போதும் பிடித்தது பழைய சாதம். பொரியல், கருவாட்டுக் குழம்பு, ஆட்டுக் கால் பாயா, நாக்கு மீன் வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் இதில் ஏதாவது ஒன்று இருந்தால்தான் விக்ரமுக்குச் சாப்பாடே இறங்கும்!
* விக்ரமின் செல்லப் பெயர் கென்னி. இந்தப் பெயரில் நீங்கள் கூப்பிட்டால், உடனே திரும்புவார். ஒரு ஹாய், கையசைப்பு, ஒரு புன்னகை இலவசம்!
* ஏகப்பட்ட இசைக் கருவிகளை வாசிப்பார். ஆரம்பத்தில் இருந்து இசையில் பிரியப்பட்டு இருக்கிற விக்ரமுக்குப் பிடித்த கம்போஸர்... யானி!
* மணி, ஸ்பைக்கி, கொக்கோ, காரா... இவை விக்ரம் ஆசையாக வளர்க்கும் நாய்களின் பெயர்கள். மாயா, மிஸ்பி, இவை அவர் செல்லமாக வளர்க்கும் கிளிகள். இதில் மாயா 'ஓ' போடு பாடலை உச்சரிக்கும்!
* பெசன்ட் நகரில் வீடியோ கடை, பழக்கடை இப்படி எங்காவது விக்ரம் மாதிரி யாராவது தென்பட்டால், ஆச்சர்யப்பட வேண்டாம். அது அவரேதான். ஸ்டார் என்ற பந்தா இல்லாமல், அவரே இறங்கி பர்சேஸ் செய்வார்!
* ஆதரவற்றவர்களுக்கான இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவுகிறார். இவரது பிறந்த நாளுக்குக் குவிகிற ரசிகர்களில், இதய சிகிச்சை செய்துகொண்டு மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும்!
* விக்ரமின் வீட்டை அலங்கரிக்கும் ஓவியங்கள், அவருடைய கை வண்ணம்தான். இப்பவும் அவுட்டோர் போனால் இயற்கை தரும் அபூர்வமான இடங்களை வண்ணத்தில் கொண்டுவந்துவிடுவார்!
* நேஷனல் அவார்டு வாங்கிய அன்று எந்த பார்ட்டி, படாடோபம் இல்லாமல், வீட்டில் குடும்பத்தோடு இருந்த வித்தியாசமானவர் விக்ரம்!
* விக்ரமுக்குப் பிடித்த நடிகர், ராபர்ட் டி நீரோ. பிடித்த நடிகை, ஜுலியா ராபர்ட்ஸ். எல்லோர் மாதிரியும் நடித்துக் காட்டி அசத்துவார்!
* ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி எனச் சரளமாக உரையாடுவார். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதும் பழக்கமும் உண்டு!
* மகனின் பெயர் துருவா. மகள், அக்ஷிதா. இரண்டு பேருமே படிப்பில் சூரப்புலிகள். இருவருக்கும் இங்கிலீஷ் டீச்சர் விக்ரம்தான்!
* அதிர்ஷ்டமல்ல, தன்னம்பிக்கை மட்டுமே கைகொடுக்கும் என்பதை எப்போதும் நம்புவார்!
* விக்ரம் தன் நண்பர்களை, டைரக்டர்களை சந்திக்கிற இடம், அடையார் பார்க் ஷெராட்டனின் லாபியில்தான்!
* 'கிங்' என்றுதான் தன் கணவரை மனைவி ஷைலா செல்லமாக அழைப்பார்!
* ஜப்பானிய உணவு வகைகளை மிகவும் பிரியப்பட்டுச் சாப்பிடுவார். தென்னக உணவுகளைத் தவிர, விக்ரம் விரும்பும் உணவுவகை இதுதான்!
* விக்ரமின் இதரப் பெயர்கள் சீயான், கென்னி, ஜான் கென்னடி. அவரது அதிகாரபூர்வமான வெப்சைட்டில் இருக்கும் பெயர் விக்ரம் கே.வினோத்!
No comments:
Post a Comment