நடிகர் சூர்யா நடித்த படம் 'ரத்த சரித்திரம்'. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் 'தாதா'க்களின் பழி வாங்கும் கொலையை மையமாக கொண்டு ராம்கோபால் வர்மா இந்த படத்தை தயாரித்தார்.
தமிழ், தெலுங்கிலும் 'ரத்த சரித்திரம்' படம் எடுக்கப்பட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. முன்னாள் அமைச்சரின் கொலை வெறியால் குடும்பத்தையே இழந்த சூரி என்கிற சூரிய நாராயணரெட்டி என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இவரது மனைவியாக பிரியாமணியும், அரசியல்வாதியாக விவேக் ஓபராயும் நடித்து இருந்தனர். ஆந்திராவில் இந்த படம் பரபரப்பாக ஓடியது. இந்த படம் ரிலீசான சில வாரங்களில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த உண்மையான சூரிய நாராயணரெட்டி அவரது நண்பரும், ரவுடியுமான பானுகிரண் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது குடும்பத்துக்கு நடிகர் சூர்யாவும் இரங்கல் தெரிவித்து இருந்தார். சூரியின் லட்சக்கணக்கான சொத்தை பானுகிரண் சுருட்டியதாகவும் இதற்காக அவனை பழிவாங்க நினைத்த சூரியை பானுகிரண் நைசாக காரில் அழைத்துச்சென்று கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது.
பின்னர் ரூ.4 லட்சம் பணத்துடன் அவன் தலைமறைவானான். சூரி கொலைக்கு உடந்தையாக இருந்த மதுசூதனன்ரெட்டி, மன்மோகன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் பானு கிரண் மட்டும் தலைமறைவாக இருந்தான். அரசியல்வாதிகளின் அரவணைப்பில் அவன் இருப்பதாக ஆந்திராவில் பேசப்பட்டது. இந்த நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு பானுகிரண் போலீசில் சிக்கி உள்ளான். ஐதராபாத் நகரில் அவன் பிடிபட்டதாகவும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ரமண மூர்த்தி தெரிவித்தார். ரூ.4 லட்சம் பணத்துடன் அவன் பல்வேறு மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் பணம் காலியானதால் பூராபாத் வந்தபோது போலீசில் சிக்கி கொண்டதாகவும் அவர் கூறினார். கைதான பானுகிரண் ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு மே 4-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டான்.

No comments:
Post a Comment