தமிழக ராணுவ கல்லூரியில் போர் பயிற்சி பெற வந்திருந்த இலங்கை ராணுவ வீரர்கள், கடும் எதிர்ப்பு அதிகமானதால் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் பெங்களூரில் இருந்து விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த ராணுவ கல்லூரியில் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ கல்லூரியை பார்வையிடவும், பயிற்சி பெறவும் இலங்கையில் இருந்து 25 ராணுவ அதிகாரிகள் குன்னூர் வந்தனர். அவர்கள் குன்னூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இது பற்றிய தகவல் காட்டுத்தீ போன்று பரவியது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்க நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை குன்னூர் லெவல் கிராசிங் மற்றும் ஊட்டி-குன்னூர் ரோட்டில் உள்ள பிளாக்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியோர் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
அவர்கள் 220 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
வெலிங்டனில் பயிற்சி பெற இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு வலுத்து வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்பி முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை 7.15 மணிக்கு இலங்கை ராணுவத்தினர் பஸ் மூலமாக பெங்களூர் புறப்பட்டு வந்தனர். பின்னர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு சென்றனர்.
No comments:
Post a Comment