கோவை டவுன் பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து வந்த ‘டிப்டாப்’ கும்பல் கைது செய்யப்பட்டது. பிக்பாக்கெட் பணத்தில் அவர்கள் செருப்புக் கடை நடத்தி வந்ததும் அம்பலமானது. கோவை உக்கடம் - வடகோவை பகுதிகளில் டவுன் பஸ்களிலும் பஸ் ஸ்டாப்களிலும் பயணிகளிடம் பணம், நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக புகார் எழுந்தது. காலை நேரத்தில் கூட்டமாக இருக்கும் நேரத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிக்பாக்கெட் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஸ்டாப்கள் மற்றும் டவுன் பஸ்களை மப்டி போலீசார் கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்தனர்.
ஒரு சில நபர்கள் டிப்டாப் டிரெஸ்சில் பஸ் ஸ்டாப்களில் நிற்பதும் கூட்டமாக வரும் பஸ்களில் மட்டுமே அவர்கள் ஏறுவதும் தெரியவந்தது. நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் சிவானந்தா காலனி கலாம் (45), போத்தனூர் நிஜாம் (40), ஆரூண் (41), பல்லடம் கணேசன் (40) என்று தெரியவந்தது. பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். கலாம்தான் அந்த கும்பலின் தலைவன் என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த பகீர் வாக்குமூலம்:
பிக்பாக்கெட்டை ஒரு தொழில் போலவே ஆரம்பித்தேன். ஒருவராக பிக்பாக்கெட் அடிப்பதைவிட பலரை வேலைக்கு வைத்தால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்பதால் திருப்பூரில் கூலிக்கு ஆள் பிடித்தேன். தினமும் ரூ.500 சம்பளம். அதிகம் வேலை பார்த்தால் பேட்டா, தங்கும் இடம் இலவசம் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலரை ‘வேலைக்கு’ சேர்த்தேன். கோவையில் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து அவர்களை தங்க வைத்தேன். சொன்னபடி, நாளுக்கு ரூ.500 கூலி கொடுத்தேன். அதிகம் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு பேட்டா கொடுப்பேன்.
காலையில் பஸ்கள், ஸ்டாப்கள் கூட்டமாக இருக்கும். அதிலும், ஒப்பணக்கார வீதி பிரகாசம் ஸ்டாப்பில் இருந்து வடகோவை சிந்தாமணி வரை செல்லும் பஸ்கள் நிரம்பி வழியும். காலையில் தொழிலை ஆரம்பிப்போம். கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து முண்டியடித்து பஸ்சில் ஏறுவோம். பெண்களிடம் நகை, ஆண்களிடம் மணிபர்ஸ், பணம், செல்போன் என எது கிடைத்தாலும் அபேஸ் செய்வோம். வலுவாக ஏதாவது ஒன்று சிக்கிவிட்டால், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி மீண்டும் பஸ் பிடித்து ஒப்பணக்கார வீதிக்கு வருவோம்.
செயின், நெக்லஸ், பணம், செல்போன் என வருமானம் கொட்டியது. இந்த பணத்தை வைத்து வேறு தொழில் தொடங்க முடிவு செய்தோம். ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனியில் செருப்பு கடை ஆரம்பித்தோம். பகல் நேரத்தில் பிக்பாக்கெட் தொழிலை முடித்த பிறகு, மாலை நேரத்தில் செருப்பு கடையை கவனித்து வந்தோம். அந்த பிசினசும் நன்கு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் பிக்பாக்கெட் திருடர்கள் என்பது செருப்பு கடை கஸ்டமர்கள் உள்பட யாருக்கும் தெரியாது. இப்போது சிக்கிவிட்டோம். இவ்வாறு கலாம் கூறினார். கலாம் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
செய்யும் தொழிலே தெய்வம்
ReplyDelete