இலங்கை பிரச்னை தொடர்பாக மக்களவையில் விவாதிக்க திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஷைலேந்திர குமார் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அவர்களது நோட்டீஸ் குறித்து அவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன்படி அதிகாரபூர்வமாக அப்பிரச்னையை வியாழக்கிழமை (11.08.2011) எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி நிகழ்ச்சி நிரல் குறித்த விவர அட்டவணை புதன்கிழமை காலை 10 மணிக்கு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்பிரச்னை குறித்த விவாதத்தில் பங்கேற்க உள்ள காங்கிரஸ் உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் மக்களவைத் தலைவர் மீரா குமாரை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தித்து நிகழ்ச்சி நிரல் விவர பட்டியல் குறித்து விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அந்த நிகழ்ச்சி நிரல் அறிக்கைக்குப் பதில் திருத்தப்பட்ட அறிக்கையை பகல் 12 மணிக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார். திருத்தப்பட்ட அறிக்கை குறித்து தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது.
முதலில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் அறிக்கையில் இலங்கைத் தமிழர்களை ராணுவம் கொன்றது குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ள தொடர்பாக விவாதிக்கப்படும் என்பதாக உள்ளது. அதைத் திருத்தி, போரினால் பதிக்கப்பட்ட தமிழர்களின் நிவாரணத்துக்கு இந்திய அரசு வழங்கிய நிவாரணம் குறித்து விவாதிப்பது என்று திருத்தப்பட்டுள்ளது ஏன் என்று தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment