தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி நடந்தது. மே 13-ந் தேதியன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2 ஆயிரத்து 734 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கில் சைதை துரைசாமி கூறியிருந்தார்.
திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு 5 ஆயிரத்து 126 ஓட்டு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ராமச்சந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். கும்பகோணம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் ஆயிரத்து 272 ஓட்டு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் ராம.ராமநாதன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட ஆயிரத்து 584 ஓட்டுகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் வெற்றி பெற்றார். பெரியகருப்பன் பெற்ற வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எழும்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரிதி இளம்வழுதியை தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி 202 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நல்லதம்பி வெற்றி பெற்றதை எதிர்த்து, அந்த தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த 5 தேர்தல் வழக்குகளும் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பிரதிவாதிகள் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்

No comments:
Post a Comment