டி. ராஜேந்தர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் அது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
13 ஆண்டுகளுக்கு முன்பு எனது “மோனிசா என் மோனலிசா” என்ற படம் வெளியானது. இந்த படத்தின் திருச்சி ஏரியா வினியோக உரிமையை டி.ஆர். ராமமூர்த்தி என்பவர் வாங்கி இருந்தார். குறைந்தபட்ச உத்திரவாதம் என்ற அடிப்படையில் அந்த படத்தின் வினியோக உரிமை அவருக்கு வழங்கப்பட்டது. இதற்காக அவரிடம் இருந்து ரூ.59 லட்சம் வாங்கினேன். நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த பணத்தை நான் திருப்பி கொடுக்க வேண்டியது இல்லை.
இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் சூழ்நிலை இருக்கிறது. ஆனால் ராமமூர்த்தி எனது மகன் சிலம்பரசன் படம் வெளிவரும் போதெல்லாம் பிரச்சினை செய்து வருகிறார். “சிலம்பாட்டம்” படம் வெளியாகும்போது அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று வழக்கு போட்டார். அவர் ஒரு மோசடி பேர் வழி.
எனது மகன் சிம்பு படப்பிடிப்புக்காக ஒரு மாதமாக மைசூரில் உள்ளார். இந்த நிலையில் பணப்பிரச்சினை தொடர்பாக எனது வீட்டுக்கு ராமமூர்த்தி வந்ததாகவும், அப்போது நானும் எனது மகன் சிம்புவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கமிஷனரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பான செய்தி ஒரே ஒரு பத்திரிகையில் திட்டமிட்டு பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
நானும் சிம்புவும் பெயரும் புகழோடும் இருக்கிறோம். எங்களது பெயரை கெடுக்கும் வகையில் பொய் புகார் கொடுத்துள்ள ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்திருக்கிறேன். விரைவில் ராமமூர்த்தி மீது மானநஷ்ட வழக்கும் தொடருவேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.
அப்போது அவரது வக்கீல் சண்முகம், லட்சிய தி.மு.க. அமைப்பு செயலாளர் வாசு, கட்சி நிர்வாகிகள் துரை, மதன், முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment