தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட ரூ. 2 கோடி கூலி கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் ஜனவரி 10ம்தேதி 3 பேர் கொண்ட கும்பலால் பசுபதி பாண்டியன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக இதுவரை அருளானந்தன், ஆறுமுகசாமி ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்து பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். மேலும் கொலையாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுத்து உதவிய நிர்மலா மற்றும் அவரது கூட்டாளி முத்துப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கொலையைத் தூண்டி கொலையாளிகளை ஏவி விட்ட சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் நிர்மலா, முத்துப்பாண்டி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஓராண்டாகவே பசுபதி பாண்டியனை கொலை செய்ய நிர்மலா, முத்துப்பாண்டியன் ஆகியோருடன் சுபாஷ் பண்ணையார் திட்டம் தீட்டியுள்ளார். இதில் நிர்மலா, முத்துப்பாண்டிக்கு தலா ரூ. 1 கோடி தரப்பட்டுள்ளது. இந்த பணத்தில்தான் நிர்மலா, 3 ஷேர் ஆட்டோ, 3 பிளாட், 2 சொகுசு கார் வாங்கியுள்ளார்.
பசுபதி பாண்டியன் கொலையான அன்று இரவு போலீசார் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற நிர்மலா, ஐயாவே போயிட்டார், இனி எங்களை காப்பாத்த யார் இருக்கா? என கூப்பாடு போட்டுக் கதறி அழுதார்.
மேலும் தீக்குளிக்கப் போவதாக கூறி கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றுவது போல நாடகமாடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை பறித்துள்ளனர். தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்டமாக நிர்மலா நாடகமாடியுள்ளார்.
கடந்த ஆண்டு நிலப்பிரச்னையில் முத்துபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினருக்கு ஆதரவாக பசுபதி பாண்டியன் பஞ்சாயத்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் முத்துபாண்டியனை தூக்கிச் சென்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார் முத்துப்பாண்டி. இதை அறிந்த சுபாஷ் பண்ணையார், முத்துப்பாண்டி தரப்பை வளைத்துள்ளார். அதன் பிறகுதான் நிர்மலாவை, சுபாஷ் பண்ணையார் தரப்பினருக்கு கவுன்சிலர் முத்துபாண்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் பசுபதி பாண்டியனை கொலை செய்து முத்துபாண்டி பழி தீர்த்து கொண்டார்.
கடந்த 11ம் தேதி பசுபதி பாண்டியன் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அன்று திண்டுக்கலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் முத்துப்பாண்டியும் பங்கேற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோரைப் பிடிக்க தனிப்படைகள் கேரளா மற்றும் மும்பை விரைந்துள்ளன. விரைவில் அவர்களும் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment