முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். முன்னதாக சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்படும் முன்பு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எந்த ஒரு பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. இதுவரை எந்த ஒரு போரும் மோதல்களுக்கான தீர்வாக அமையவில்லை. போர்களால் நாட்டில் மோசமான நிலையே ஏற்பட்டுள்ளது. போரில் உயிரிழந்த மகன்களை பெற்ற தந்தையே புதைத்த அவலம் எல்லாம் நடந்துள்ளது.
தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே போருக்கு பிறகு மக்களிடம் நம்பிக்கையையும் உண்மையையும் தட்டி எழுப்ப வேண்டியது இலங்கை அரசின் கடமை ஆகும்.
இலங்கையில் அமைதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்தான் நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த நல்லெண்ண பயணத்தைக் கூட சிலர் விமர்சனம் செய்யலாம். அது அவர்களது ஜனநாயக உரிமை.
இலங்கையில் எல்லா தரப்பு மக்களும் செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
இலங்கையில் நான் தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்கள், இரு தரப்பினரையும் சந்தித்து பேசுவேன். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இரு தரப்பினரும் அமைதியுடன் வாழும் சூழ் நிலையை உருவாக்க முயற்சி செய்வேன். போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். அவர்களை சந்தித்து பேச முகாம்களுக்கு செல்ல விரும்புகிறேன். முகாம்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யுமாறு இலங்கை அரசிடம் நான் கேட்டுள்ளேன்.
இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்னும் மும்மொழி கல்வித் திட்டத்தை நான் தொடங்கி வைக்க உள்ளேன். இந்த கல்வித் திட்டம் இலங்கையை மீட்டு எடுத்து மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருக்கும். யாழ்ப்பாணத்தில் பல் கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்.
இந்தியாவை 2020-ம் ஆண்டு ஆற்றல்மிக்க வல்லரசு நாடாக மாற்றுவதற்கான திட்டம் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனது அனுபவங்களை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்
சிங்களத்துடன் வாழ்ந்து பார்த்தவர்கள் ஈழத் தமிழர்கள்.1956 முதல் எத்தனை இனக் கலவரங்கள்.சிங்கள அரசுகளே முன் நின்று நடத்தின.அணுக்குண்டிற்கு வித்திட்ட ஐயா,இராசயணக் குண்டுகள்,கொத்துக் குண்டுகள் மூலம் இனப்படுகொலை, தமிழிச்சிகளின் மானம்,இறந்தவர்களைக் கூட விட்டு வைக்காத ராஜபக்சே,எந்த அதிகாரப் பகிர்வும் தமிழர்களுக்கு கிடையாது என்று சொல்லி விட்ட சிங்களம் திருந்துவார்கள் என்று உங்களால் மட்டுமே நினைக்க முடியும். தமிழர்கள் கேட்கும் தமிழ் ஈழத்திற்கு வித்திடுவீர்களா? என் தாத்தா சொன்ன ஈழ இனக் கலவர கதையின் சிறிய கட்டுரையை எழுதி இருந்தேன்.அதை படிப்பீர்களா? இல்லையேல் கூடங்குளம்,பெரியாறு போல் தட்டிக் கழித்து சோரம் போவீர்களா?வயது போய் விட்டால் கருணானிதி போல் உளறாதீர்கள். சிங்களத்தை எத்தனை கலாம் வந்தாலும் திருத்த முடியாது. வாக்குறுதி கொடுப்பார்கள் வாங்கிக் கொண்டு வாருங்கள்.சிங்களத்தின் வாகுறுதிகள் எப்படி என்பது அனைவரும் அறிந்ததே.
ReplyDelete