திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பதவி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்களிடையே ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு வருகிற 3-ந்தேதி கூடுகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க.வின் 14-வது உள்கட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தல், வருங்கால கூட்டணி உள்பட கருத்துக்கள் குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது. தி.மு.க. உள்கட்சி தேர்தலில் எந்த விதமான மாற்றங்கள் செய்யலாம்? அதற்கு ஏற்ப தி.மு.க. சட்டவிதிகளில் எவ்வாறு மாற்றம் செய்யலாம் என்பது குறித்து தி.மு.க. சட்ட திருத்த குழு தற்போது ஆலோசித்து வருகிறது.
உள் கட்சி அமைப்பில் மாற்றம்
பொதுக்குழுவில் உள்கட்சி அமைப்பில் அதிரடி மாற்றம் செய்வது பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. உள்கட்சி தேர்தலில் ஒன்றிய, பேரூர், நகர தி.மு.க. செயலாளர் பதவிகளை 3 முறை வகித்தவர்கள் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று தி.மு.க.வில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் தி.மு.க.வில் புதியவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இளைஞர் அணியில் இருந்து விடுபட்டு கட்சியின் வேறு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
மாவட்டங்கள்தோறும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து புதிய நிர்வாகிகளை அவர்களின் கட்சி ஈடுபாடு, தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து வருகிறார். இளைஞர் அணியில் இருந்து வருபவர்களுக்கு கட்சியில் பல்வேறு பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தி.மு.க.வில் புதியவர்களுக்கு கட்சி பதவியும், இளைஞர்களுக்கு அரசியல் வாய்ப்புகளும் கிடைக்கும் வகையில் பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுக்கு பிடி
தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. மாவட்ட செயலாளர் பதவிக்கு மேல் மண்டலங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்சி செயல்படாத வகையில், கட்சி தொண்டர்கள் அனைவரும் விரும்பும் பல்வேறு திருத்தங்களை கட்சி அமைப்பில் கொண்டு வருவது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக பாராளுமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை நியமிக்கலாமா என்பது குறித்தும் சட்டத் திருத்த குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இதை பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை. எனவே 10 சட்டசபை தொகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டங்களை இரண்டாக பிரித்து தி.மு.க. நிர்வாகிகளை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனிக்கு வாய்ப்பு உண்டா
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி 6 மாத காலம் சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்க வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். கனிமொழியின் ஆதரவாளர்களும் அதனை விரும்புகின்றனர். பிப்ரவரி 3 ம் தேதி கூடும் பொதுக்குழுவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment