இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக ராமேசுவரம் கோர்ட்டில் இன்று டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஆஜரானார்கள். கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமேசுவரத்தில் சினிமா திரையுலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு டைரக்டர் பாரதிராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை ராமேசுவரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் ராமேசுவரம் நீதி மன்றத்தில் சீமான், அமீர் ஆகியோர் ஆஜரானார்கள். நீதிபதி குமரேசன் இந்த வழக்கு தொடர்பாக கேள்வி கள் கேட்க வேண்டிய திருப்பதால் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சீமான், அமீர் ஆகியோர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசால் பலகோடி ரூபாய் நிதி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக கட்டி கொடுத்த வீடுகளில் தமிழர்கள் குடியேறவில்லை. ஆனால் சிங்கள ராணுவத்தினர் தான் அதிகம் பேர் குடி யேறியுள்ளனர்.
இலங்கையில் போர் நடந்தபோது விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்கள் சொந்த வீடுகளில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்கள் இன்னமும் முள்வேளி முகாமில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதலில் முள்வேலி முகாமில் உள்ள தமிழ் மக்களை வெளியே கொண்டுவர வேண்டும். தமிழக மீனவர்களை 550 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர். இதுவரை காங்கிரஸ் மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லை. நமது பகை நாடான பாகிஸ்தான் கூட நமது மீனவர்களை சுடவில்லை. நமது நட்பு நாடான இலங்கை தமிழக மீனவர்களை சுட்டு கொன்றது வேதனை அளிக்கிறது.
நான் இதுபற்றி பேசினால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு போடுகிறார்கள். என் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, மதுரை சீமான் ஆகியோர் உடன் இருந்தனர். டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் இன்று ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜரானதை தொடர்ந்து அங்கு டி.எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment