இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி தான் விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த அவமானம் அடைந்தது. மெல்போர்ன் டெஸ்டில் 122 ரன்னிலும், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னிலும், பெர்த் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்னிலும், அடிலெய்ட்டு டெஸ்டில் 298 ரன்னிலும் மோசமாக தோற்றது.
இந்திய அணி 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் (0-4) செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இப்படி நடந்துள்ளதால் வீரர்கள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
வெளிநாட்டில் இந்திய அணி தொடர்ந்து 8 தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியை அதிரடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டோனி தற்போது 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) கேப்டனாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அவரது டெஸ்ட் கேப்டன் பதவி பிறக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியின் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் கேப்டன் பதவியை இழக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் டோனி கேப்டனாக நீடிப்பார். டெஸ்ட் தொடர் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போதே 2013-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக டோனி அறிவித்திருந்த முடிவால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. அந்த நேரத்தில் 2013-ம் ஆண்டை பற்றி டோனி பேச தேவையில்லை என்று கிரிக்கெட் வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவரது இந்த அறிவிப்பு அணிக்குள் பிளவு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசமான தோல்வி, அவரழ நடவடிக்கை ஆகியவற்றின் எதிரொலியாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது.
டோனிக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு ஷேவாக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஷேவாக்கை பொறுத்தவரை அவர் தனது வழியில் செயல்படுவார். டோனியின் வழியை பின்பற்ற மாட்டார் என்று தெரிகிறது. 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்யும் முறை, பீல்டிங் அமைக்கும் முறை ஆகியவை பற்றி தானே முடிவு செய்துக் கொள்வார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஷேவாக் முன்னுரிமை கொடுப்பார். சீனியர் வீரர்களான தெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு டோனியின் கேப்டன் பதவியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஷேவாக் தலைமையில் விளையாடுவதில் பிரச்சினை இருக்கலாம்.
இதற்கிடையே சீனியர் வீரர்கள் யாரும் ஓய்வு பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெஸ்டில் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவர்கள் என்று தெரிகிறது. சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ரோகித்சர்மா, ரெய்னா, புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment