கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாய் அருகே உள்ள கடங்கநல்லூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். 70 வயது முதியவரான இவர் கடந்த 40 வருடங்களாக சவுண்டு சர்வீஸ் நடத்தி வருகிறார்.
இவருக்கு குட்டி என்ற மனைவியும், பாபு என்ற மகனும், பிந்து, சிந்து ஆகிய மகள்களும் உள்ளனர். வறுமையின் பிடியில் வாழ்க்கை நடத்தி வந்த அய்யப்பனின் மகன் மற்றும் மகள்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மூத்த மகள் பிந்துவுக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஆனால் போதிய பணம் இல்லாததால் மாப்பிள்ளை வீட்டார் பிந்துவை திருமணம் செய்யவில்லை. அய்யப்பனுக்கு சொந்தமான 2 1/2 சென்ட் நிலத்தில் ஒரு ஓலை குடிசை வீட்டிலேயே அனைவரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட அய்யப்பன் கொச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடையில் இருந்து கேரள மாநில அரசின் சிறப்பு குலுக்கலான ரூ.1 கோடி பரிசு தொகை கொண்ட 5 லாட்டரி சீட்டுகளை கடந்த 2 நாள்களுக்கு முன்பு வாங்கினார். அதற்குரிய பணத்தை அவர் கொடுக்காமல் கடனாகவே வாங்கிச் சென்றார்.
இந்த லாட்டரி குலுக்கல் நேற்று நடந்தது. இதில் அய்யப்பன் வாங்கிய லாட்டரி சீட்டு நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தது. அவர் வாங்கிய மற்ற 4 லாட்டரி சீட்டுகளுக்கும் ஆறுதல் பரிசான ரூ.10 ஆயிரம் முதல் 40 ஆயிர வரை கிடைத்தது.
இந்த தகவலை லாட்டரி விற்பனையாளர் சுரேஷ் அய்யப்பனிடம் தெரிவிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. பக்கத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்காக மின்அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அவரை கண்டு பிடித்து விஷயத்தை கூறியபோது ஆனந்த அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் தான் கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும், அதற்கு பணம் கொடுக்காததால் அந்த சீட்டுகள் சுரேசுக்கு சொந்தமானது என்றார்.
ஆனால் சுரேஷ் அதை ஏற்கவில்லை. லாட்டரி சீட்டுகள் வைத்திருக்கும் உங்களுக்கே பரிசு தொகை சொந்தமானது என்றார். இதையடுத்து லாட்டரி விற்பனையாளர் சுரேசின் நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment