நேர்மையாளர்கள் எங்கே என்று சகல துறைகளிலும் தேட வேண்டிய ஒரு காலகட்டத்தில், அவ்வப்போது சிலர் தலையை நீட்டி இதோ அப்படி ஒரு ஆள் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரிஜாத் சஹா மாதிரி.
யாரிந்த பாரிஜாத் சஹா? ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000.
கடந்த ஞாயிறன்று தனது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்று இன்டர்நெட்டில் பார்த்துள்ளார். ரூ 49,570,08,17,538 (அதாவது 9.8 பில்லியன் டாலர்கள்!) இருப்பதாக திரையில் வர, ஷாக்கடித்து நின்றுவிட்டார் மனிதர். இந்தத் தொகை இந்திய கல்வித் துறைக்கான ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்!
ஆஹா வந்த வரை லாபம் என்று கமுக்கமாக இருக்கவில்லை சஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49000 கோடி வந்துள்ளது.. சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது. எடுக்க வேண்டும்," என்றாராம்.
அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை ஞாயிறன்றே எடுத்திருக்க முடியும். ஆனால் கணக்கில் நடந்துள்ள தவறைப் பார்த்ததும் அடுத்த நாள் வரை காத்திருந்தார்.
விஷயம் வெளியில் கசிந்ததும் உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி போட்டுக் கொண்டு சஹாவை பேட்டி எடுத்துத் தள்ளின. அவர்களிடம் சஹா கூறுகையில், "இவ்வளவு பணம் என் கணக்கிலிருப்பது தெரிந்ததும் எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்யச் சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது," என்றார்.
ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடக்கிறது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த வழிதான் அவர்களுக்குத் தெரியவில்லையாம்.
உங்கள் பணத்துக்குப் பாதுகாப்பான வங்கி என விளம்பரங்களில் கூவுகிறார்கள் பாரத ஸ்டேட் வங்கிகாரர்கள். வங்கிக்கே பாரிஜாத் சஹாக்கள் மாதிரி பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள் இப்போது!
No comments:
Post a Comment