கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, அப்துல்கலாம் முன்வைத்த, "புரா' திட்டத்தை கொண்டு வருவது குறித்தும், தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்குவதும் குறித்தும், தலைமைச் செயலருடன் அணுமின் நிலைய அதிகாரிகள், பேச்சு நடத்தி உள்ளனர். இதற்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கியுடன், இந்திய அணுமின் கழக அதிகாரிகள், மின்வாரிய சேர்மன், எரிசக்தி துறை செயலர் ஆகியோர், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர்.
கூடுதல் மின்சாரம் :
இதில், தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் குறித்து, எரிசக்திதுறை செயலர் விளக்கி இருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் உற்பத்தி துவங்கியதும், 1,000 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக, தமிழகத்திற்கு தர வேண்டும்; அதன்பின், இரண்டாவது உலையில் உற்பத்தி துவங்கியதும், கேரளா, புதுவை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு தரலாம் என, அவர் பரிந்துரைத்து உள்ளார். இதுதவிர, தமிழகத்திற்கு கல்பாக்கத்திலிருந்து, 75 சதவீத மின்சாரம் தருவது போல், கூடங்குளத்தில் இருந்தும், 75 சதவீத மின்சாரத்தை தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூடங்குளம் பகுதி மக்களுக்கு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றும், அரசின் சார்பில் பேசப்பட்டுள்ளது; தற்போது செய்த சமூக பாதுகாப்பு மக்கள் திட்டங்கள் போதாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
"புரா' திட்டம் :
இதற்கு, அணுமின் கழக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி, தப்கீர், பதில் அளிக்கையில், "அப்துல்கலாம் பரிந்துரைந்த, "புரா' திட்டப்படி, மீனவர்களுக்கு குளிர்பதன கிடங்குகள், கப்பல் இறங்குதளம், உயர்தர மருத்துவமனை, கல்வி மையங்கள், அதிக வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை செய்து தர முடியும்' என, கூறி உள்ளார்.
மாநில அரசு ஒப்புதல் :
இதை தமிழக அரசு ஏற்று, வரும் 31ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில், அணு எதிர்ப்புக் குழுவினருடன் சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும்; அணு எதிர்ப்புக் குழுவின் மூலமே, அப்பகுதி மக்களுக்கு அச்சம் தீர்க்கவும், அவர்களுக்குரிய கூடுதல் நலத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும், பேச்சு நடத்தப்படும் என, தமிழக அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, தமிழக அரசு மற்றும் அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment