ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாட்டில் 664 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த 2010-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அந்த தேர்தலை எதிர்க்கட்சி தலைவரான ஆங்சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி புறக்கணித்தது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் காலியாக இருந்த 45 தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
அதில், 44 தொகுதிகளில் ஆங்சூகி கட்சி போட்டியிட்டது. சாவ்மு தொகுதியில் ஆங்சூகி போட்டியிட்டார். நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
ஓட்டுப்பதிவை ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா உள்பட 10 நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்தனர். ஓட்டுகள் எண்ணப்பட்டு எப்போது தேர்தல் முடிவு வெளியாகும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ஒரு வாரத்திற்குள் தேர்தல் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சாவ்மு தொகுதியில் ஆங்சான் சூகி வெற்றி பெற்றுவிட்டதாக கட்சி அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உற்சாக மிகுதியால் ரோடுகளில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த இடைத்தேர்தலில் 44 தொகுதிகளில் ஆங்சூகி கட்சி போட்டியிட்டது. போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் அவரது கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் இருப்பதாகவும் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக ஆட்சி மலர ஆங்சான் சூகி கடுமையாக போராடினார். இதனால் அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. கடந்த 1990-ம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது.
ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள், அதை அங்கீகரிக்கவில்லை. அவரை கைது செய்து 22 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைத்தது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு குரலை தொடர்ந்து கடந்த ஆண்டுதான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து நேற்று நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதன் முறையாக மியான்மர் பாராளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதியாக செல்லும் வாய்ப்பு பெற்றுள்ளனர். அங்கு ஜனநாயகத்துக்காக அவரின் குரல் ஒலிக்க உள்ளது.
No comments:
Post a Comment