தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.
ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதற்காக, டயாலிசிஸ் செய்யப்பட்டது. உடல்நிலை மோசமானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 2 சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை செயல் இழந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
நினைவாற்றலை முற்றிலுமாக இழந்து, கோமா' நிலையில் இருந்த அவருக்கு, தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நடிகர் ரவிச்சந்திரன் 25.07.2011 அன்று இரவு சென்னையில் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment