நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் உள்ள சாமுண்டிபுரம் ரஜினிகாந்த் திருமண மஹாலில் நடந்தது. சிறப்பு விருந்தினராக சினிமா டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.
ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள் தான் தெய்வங்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால் தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார். ரஜினிகாந்த் கேமிராவிற்கு முன்பு நன்றாக நடிப்பார். கேமிராவுக்கு பின்னால் மற்றவர்களை போல அவருக்கு நடிக்க தெரியாது. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடிகிறது.
எந்த வேலை செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்தால் சுலபமாக இருக்கும். வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும். குறுக்கு வழியில் வரும் பணம் நிலைக்காது. தன்னை தியாகம் செய்து அர்ப்பணிப்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வாழ்க்கைக்கு ரோல் மாடலாக வாழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். ரசிகர்கள் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும். குடும்பத்தை நன்கு கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு எஸ்.பி. முத்துராமன் பேசினார்.
No comments:
Post a Comment