40 வயதைக் கடந்தவர்களுக்கு இனி திமுக இளைஞர் அணியில் இடம் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க. ஸ்டாலின் அறிவி்ததுள்ளார்.
சட்டசபை தேர்தலிலும் சரி, உள்ளாட்சித் தேர்தலிலும் சரி திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு காரணம் இளைஞர்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. பெயர் தான் இளைஞர் அணி ஆனால் அதில் இருப்பவர்கள் எல்லாம் வயதானவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இளைஞர் அணியின் பொறுப்பாளராக நீண்ட காலமாக இருந்து வரும் ஸ்டாலினுக்கே தற்போது 58 வயதாகிறது.
ஆசை, ஆசையாய் இளைஞர் அணிக்கு யாராவது வந்தால் அவர்களு்ககு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. திமுகவின் முக்கிய அங்கமான இளைஞர் அணி கடந்த 1080ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1981ம் ஆண்டு இளைஞர் அணி நிர்வாகிகளாக மு.க. ஸ்டாலின் உள்பட 7 பேர் நியமிக்கப்பட்டனர்.
தற்போது இளைஞர் அணியின் செயலாளராக ஸ்டாலின் உள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவியதையடுத்து இளைஞர் அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த தேர்தலில் நாங்கள் தோற்றது உண்மையே. மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் அவ்வாறு வாக்களித்தனர். ஆனால் அவ்வாறு வாக்களித்தவர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலி்ல் எங்களுக்கு 26 சதவீத வாக்குகள் கிடைத்தது. திமுகவின் அஸ்திவாரம் பலமானது. இளைஞர் அணியில் மாற்றம் செய்வது மிகவும் அவசியம் என்பதை புரிந்துகொண்டுள்ளோம்.
இதையடுத்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். சேர்க்கை முடிந்தவுடன் அவர்களில் திறமைசாலிகளான 50 பேரைத் தேர்வு செய்து அவர்களை நானே சந்தித்து விவாதம் நடத்தி பொறுப்புகள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளின் அதிகபட்ச வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும். நகர, ஒன்றிய, பேரூர் அமைப்புகளில் நிர்வாகிகள் வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும். உறுப்பினராக சேர்கையில் வயதுச் சான்றிதழை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்களும் கழகத்தில் இருப்பார்கள். ஆனால் தகுதியும், திறமையும் வாய்ந்த இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியை 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடு நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment