2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரி ஆ.ராசாவிடம் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்து வருகிறார். அவர் நேற்றும் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை அந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 25-ந் தேதிக்கு மாற்றியது குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
பிறகு அதே ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி பிரதமருக்கு ஆ.ராசா மற்றொரு கடிதம் எழுதினார். அதில், ‘முதலில் வருபவருக்கு முதலில்‘ என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு செய்வதுபற்றி எழுதி இருந்தார். இந்த கடிதங்களை எழுதுவதற்கு முன்பு, இதுதொடர்பாக அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்துடனோ, அப்போதைய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியுடனோ ஆ.ராசா ஆலோசனை நடத்தினாரா என்று எனக்கு நினைவு இல்லை.
2007-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி எழுதிய கடிதத்தை ஆ.ராசா வஞ்சக எண்ணத்துடன் எழுதினாரா என்றும் எனக்குத் தெரியாது.
இவ்வாறு ஆச்சாரி கூறினார்.
No comments:
Post a Comment