சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் ஊரில் அதிமுக கொடிக்கம்பத்தில் கருப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக தற்போதைய நகர்மன்ற தலைவராக இருக்கும் பொறியியல பட்டதாரியான முத்துச்செல்வியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 84-87 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சங்கரலிங்கத்தின் மகள் ஆவார். இவரது கணவர் பெயர் முத்துமாரியப்பன். இவர்களுக்கு சசிகுமார், சரவணகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இது குறித்து நிருபர்களிடம் முத்துச்செல்வி கூறுகையில், வரும் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் ஆசியோடு மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச் சென்ற பணிகளை தொய்வில்லாமல் தொடருவேன் என்றார்.
முத்துச்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த ஊரான புளியம்பட்டியில் அதிமுக கொடிக் கம்பத்தில் இருந்த கட்சிக் கொடியை அகற்றி விட்டு அதில் கருப்புக் கொடியை அப்பகுதி மக்கள் ஏற்றியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்து விட்டதற்கு கண்டனம் தெரிவித்து தான் கருப்புக் கொடி ஏற்றியுள்ளோம் என்றனர்.
ஏற்கனவே சீட்டு கேட்டு முண்டியடித்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதிமுக சார்பில் இன்று சங்கரன்கோவிலில் முதல் பொது கூட்டம் அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment