சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற அய்யப்ப பக்தர் சுடுதண்ணீர் ஊற்றி கொல்லப்பட்டார் என்று, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவேற்காடு திருவேங்டகம் தெருவைச் சேர்ந்தவர் சாந்தவேல் (39). பிளம்பிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு தட்ஷனி (12), சஞ்சனா(9) என்ற மகள்கள் உள்ளனர். சாந்தவேல் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். கடந்த 6ம் தேதி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த சந்திரசாமி என்பவரது தலைமையில் 80 பேர் மாலை போட்டு சபரிமலைக்கு ரயிலில் சென்றனர். இவர்களுடன் சாந்தவேலும் சென்றார்.
9ம்தேதி, கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு போன் வந்தது. அதில் பேசிய கோட்டயம் போலீஸ்காரர் ஒருவர், “உங்கள் கணவருக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா, உறவினர்களை அழைத்துக் கொண்டு கோட்டயத்துக்கு சென்றார். அங்கு அரசு மருத்துவமனையில் சாந்தவேல், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதை கண்டு கதறி அழுதார்.
சம்பவம் நடந்து எப்படி? என்று சாந்தவேலிடம் கேட்டனர். அப்போது அவர், “பம்பையில் உள்ள டீக்கடைக்கு சென்றேன். அப்போது, மலையாளி டீக்கடைக்காரர் என் மீது சுடு தண்ணீரை ஊற்றி விட்டார்’’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, சித்ரா கணவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11ம் தேதி காலை சிகிச்சைக்காக சேர்த்தார். நேற்று முன்தினம் திடீரென சிகிச்சை பலன் அளிக்காமல் சாந்தவேல் பரிதாபமாக இறந்து போனார்.
இதனை கண்டு அவரது உறவினர்கள் மிகுந்த ஆத்திரமடைந்தனர். சாந்தவேலின் சகோதரர் பொன்வேல், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். மாலையில் சாந்தவேல் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது தம்பி பழனிவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது சகோதரர் சாந்தவேல், சபரிமலைக்கு முதல் முறையாக மாலை போட்டார்.
இவரது நண்பர் ரமேஷ் மூலம் குருசாமியான சந்திரசாமி என்பவருடன் சபரிமலைக்கு சென்றார். அங்கு டீக்கடை பாய்லரில் ரூபாய் நோட்டை ஒட்டி காயவைத்துள்ளார். அப்போது, சில வார்த்தைகள் தமிழில் பேசியுள்ளார். இதைக் கேட்ட டீக்கடைக்காரர் உடனே பாய்லரில் இருந்த சுடுதண்ணீரை முதுகில் ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் கிடந்த அவரை, சில தமிழர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்த பிறகு சந்திரசாமியிடம் சென்று கேட்டேன். ஆனால், அண்ணன் பற்றி எனக்கு தெரியாது என்று முரணான தகவல்களை தெரிவித்தார்.
கோட்டயம் போலீசுக்கு வழக்கு மாற்றம்
கீழ்ப்பாக்கம் போலீசார் சந்திரசாமியை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அப்போதும் அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறுகிறார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் கோட்டயம் போலீசாரிடம் அங்கு நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சாந்தவேல் டீக்கடை பாய்லரில் ரூபாய் நோட்டை காய வைத்தபோது, எதிர்பாராதவிதமாக அது கீழே விழுந்துள்ளது. அப்போது, சுடுதண்ணீர் அவரது முதுகில் பட்டுவிட்டது. மற்றபடி வேறு ஏதும் காரணங்கள் இல்லை. ஆனாலும், புகார் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக கோட்டயம் போலீசாருக்கு தற்போது வழக்கு மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
No comments:
Post a Comment