ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் போனியார் என்ற இடத்தில் மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
போனியார் பகுதியில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரி மக்கள் கிட்டத்தட்ட 500 பேர் அங்குள்ள மின் நிலையத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மின் நிலைய மெயின் கேட்டை நோக்கி முன்னேறினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் போராட்டம் நடத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில், அல்டாப் அகமது சூட் என்ற 25 வயதேயான இளைஞர் பரிதாபாமாக சம்பவ இடத்தில் கொல்லப்பட்டார். 70 வயதான முதியவர் அப்துல் மஜீத் கான், 25 வயதான பர்வேஸ் அகமது கான் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பரபரப்பும் காணப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடும் அதிருப்தியும், வருத்தமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை முறையாக செய்யுங்கள் என்று கேட்டு போராடினால் புல்லட் பரிசா... ?
No comments:
Post a Comment