காவல்துறையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பழங்குடியின இருளர் பெண்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் மாற்றகூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மண்டபம் கிராமத்தை சேர்ந்த 4 பழங்குடியின இருளர் பெண்களை திருக்கோவிலூர் போலீஸார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு, கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு பிறகு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதால், அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸார் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை,' என்று தெரிவிக்கப்பட்டது,
தமிழக அரசின் இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், போலீஸாரின் விசாரணை சரியாக நடத்தப்படாத நிலையில், இந்த வழக்கை தமிழக அரசு ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இவ்வழக்கை வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
'கேஸ் வாபஸ் வாங்கலன்னா..' மிரட்டிய போலீஸார்... அலறிய இருளர் பெண்கள்!
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ள தி.கே. மண்டபத்து இருளர் பெண்கள் வைகேஸ்வரி, லட்சுமி, ராதிகா, கார்த்திகா எனும் நான்கு பேரிடமும் அண்மையில் பேசினோம்.
பொங்கிவரும் அழுகையை அடக்கிகொண்டு பேசிய வைகேஸ்வரி, "நாங்க தட்டான் மணல் சலிச்சு, ஆடு மேய்ச்சு, செங்கல் சூளைகளில் வேலை செய்து பொழைக்குறோம். என் அண்ணன் காசி வீட்ல இருக்கும்போது மூணு போலீஸ் வந்தாங்க. 'போலீஸ் ஸ்டேஷன் வாடா சின்ன வேலையிருக்கு'ன்னு சொன்னதும் காசி 'என் தங்கச்சி சாப்பாடு செஞ்சிருக்கு. சாப்பிட்டு வர்றேன்'னு சொன்னதும் பலவந்தமா அடிச்சு இழுத்துட்டுப்போனாங்க.
ரெண்டு போலீஸ் பைக்ல போய்ட்டாங்க. என் அண்ணனை ஒரு போலீஸ் நடத்தியே கூப்பிட்டுப்போனாங்க. நான் உடனே ஆற்றுப்பக்கம் போயி என் அன்ணன் வெள்ளிக்கண்ணு, லட்சுமி அண்ணியோட சித்தப்பா ஏழுமலைகிட்ட 'காசி அண்ணனை போலீஸ் பிடிச்சிட்டுப்போனதை’ சொன்னேன். 'நீ வீட்டுக்குப்போ அப்பா, அம்மா கிட்ட சொல்றேன்’னு வெள்ளிக்கண்ணு சொன்னதால வீட்டுக்கு வந்துட்டேன்.
ராத்திரி எட்டு மணிக்கு போலீஸ் மறுபடியும் வந்தாங்க. நான் , என் அண்ணிகள் லட்சுமி, கார்த்திகா, தங்கச்சி ராதிகா நாலு பேரும் வீட்ல இருந்தோம். காக்கிசட்டை போட்ட போலீஸ் என்னடி புலம்புறீங்கன்னு அதட்டினாங்க. அப்பா அம்மா பேரு கேட்டு அடிச்சாங்க. வலி தாங்க முடியாம சொன்னோம். பெட்டி உடைச்சு ரொம்ப வருஷமா சேர்த்து வெச்ச 10பவுன் நகை, 2000ரூபாய் பணம், நாலு செல்போன்கள், சார்ஜர் எடுத்துக்கிட்டாங்க. நான், என் அண்ணிகள் ரெண்டு பேர், தங்கச்சி. மாணிக்கம், ரங்கன், படையப்பான்னு மூணு தம்பிகள், ஆயா செல்வி, சித்தப்பா குமார்னு ஒன்பது பேரை வேன்ல ஏத்திக்கிட்டு ஊரைத் தாண்டி ஒரு தைலமரத்தோப்புக்கு கொண்டு போனாங்க.
வீட்டுக்கு வந்த என் அன்ணன் வெள்ளிக்கண்ணு, சொந்தக்காரங்க ஏழுமலை, குமாரை போலீஸ் அடிச்சு என் அம்மாவையும் சேர்த்து வேன்ல ஏத்தி திருக்கோவிலூர் ஸ்டேஷன் போயிருக்காங்க. என் அம்மாவை மட்டும் மிரட்டி வெள்ளை பேப்பர்ல கைரேகை வாங்கிட்டு சந்தப்பேட்டை கொண்டு வந்தாங்க. எங்களையும் சந்தைப்பேட்டைக்கு கொண்டு வந்தாங்க. சித்தப்பா குமார் நாங்க இருந்த வேன்ல இருந்து மாத்திட்டாங்க. இன்னொரு போலீஸ் எங்க வேன்ல ஏறி என் அம்மாவையும் ஏத்தி தைலாபுரத்தோப்புக்கு கூட்டிப்போனாங்க.
நடுராத்திரியில் கார்த்திகா, லட்சுமி, ராதிகா, நான்னு நாலு பேரையும் வேன்ல இருந்து கீழ இறக்கி மறைவான இடத்துக்கு கூட்டிப்போனாங்க. நாலு போலீஸ் எங்க மூணு பேரையும் வேணாம்னு கையெடுத்துக்கும்பிட்டும் பாலியல் பலாத்காரம் பண்ணாங்க. ராதிகாவை மூணு போலீஸ் சித்ரவதை பண்ணாங்க. அப்புறம் எங்க வீட்டுக்குப் பக்கத்துல கொண்டுபோய் விட்டாங்க .வீட்டுக்குப் போனா திருமபவும் போலீஸ் வந்திடும்னு பயந்துகிட்டு ஆற்றுப்பக்கத்துல இருக்குற பாறையில படுத்துக்கிட்டோம்" என்று கதறலோடு சொல்கிறார் வைகேஸ்வரி.
''ஆம்பளைங்க யாரும் இல்லை அழுவாதீங்க. பத்திரமா இருங்க''ன்னு சொல்லிட்டு நானும் செல்வியும் திருக்கோவிலூர் போலிஸ் ஸ்டேஷன் போனோம். என் கணவர், பையன்னு ஆறு பேரையும் போலீஸ் வேன்ல ஏத்தி விழுப்புரம் கொண்டு போனதைத் தெரிஞ்சுக்கிட்டு சந்தப்பேட்டை வக்கீல் செல்வராஜி கிட்ட புகார் தரப்போனேன் என்கிறார் வள்ளி.
லட்சுமி பேசுகையில் ''நாங்க வீட்டுக்குப் போனதும் ஒரு மணிக்கு போலீஸ் வர்ற சத்தம் கேட்டதும் ஒளிஞ்சுகிட்டோம். தட்டு முட்டு சாமான்களை சிதறவெச்சிட்டு போலீஸ் போய்ட்டாங்க. என் மாமியார் வந்ததும் நடந்ததை சொல்லிட்டு சந்தப்பேட்டை வக்கீல் வீட்டுக்குப்போனோம். அப்புறம் உளுந்தூர் பேட்டையில் இருக்கும் என் அம்மா வீட்டுக்கு வந்த பிறகு பூபதி அக்காகிட்ட நடந்ததை சொல்லி அழுதேன். அவங்க பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. கல்யாணி சார் வந்தாரு. என்ன நடந்ததுன்னு நாங்க சொல்ல அதை எழுதினாங்க. பிறகு எஸ். பி. ஆபிசுக்குப் போய் புகார் கொடுத்தோம். பேட்டி, விசாரணைன்னு 26.11.2011 அன்று சாயந்திரம் மூணு மணிக்கு போன எங்களை மறுநாள் காலையில் எட்டு மணிக்குதான் விட்டாங்க.
சுடிதார் போட்ட பெண் போலீஸ் துருவி துருவி நாலுபேரிடமும் நிறைய கேள்வி கேட்டாங்க. காக்கிசட்டை போட்ட மூணு போலீஸ் பயமுறுத்தினாங்க. நான் கர்ப்பமா இருப்பதால் மெடிக்கல் செக்கப் பண்ணா உன் கை காலை பிடிச்சு துழாவுவாங்க. உன் பெண் உறுப்புல கை வெச்சா வளர்ற குழந்தைக்கு ஆபத்துன்னு பயமுறுத்தினாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. குழந்தைக்கு ஆபத்துன்னு சொன்னதும் நான் ரொம்பப் பயந்துட்டேன் "என்று குமுறுகிறார் லட்சுமி.
''உனக்கு டைலர் வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லி ஒரு போன் நம்பர் தந்து யார்கிட்டயும் சொல்லாதேன்னு ரேவதி போலீஸ் சொன்னாங்க. போலீஸ் பலாத்காரம் பண்ணலன்னு சொன்னா கைது பண்ண சொந்தக்காரங்க ஒன்பது பேரையும் விட்டுடறேன்னு போலீச் சொன்னதால வேற வழி இல்லாம யாரும் எங்களை பலாத்காரம் பண்ணலன்னு சொல்லிட்டோம்" என்கிறார் வைகேஸ்வரி
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷிடம் இதன் - பின்னணி குறித்து சர்று விரிவாகப் பேசினோம். "மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் புகார் தந்ததும் விசாரிக்குறேன்ற பேர்ல நான், வள்ளி, பூபதி உள்ளிட்ட சிலரை வெளியே உட்கார வெச்சிட்டாங்க. கதவை மூடி நாலு பேரிடமும் விசாரனை செய்தவர்கள் ரொம்ப நேரமாகியும் அனுப்பல. மருநாள் காலை ஆறு மணிக்கு என்னை உள்ளே அழைச்சதும் ஏன் மெடிக்கல் செக்கப் பண்ண அனுப்பலன்னு கேட்டேன். அப்போதான் போலீஸ் மிரட்டுனது தெரிஞ்சது. ஏன் இப்படி அநியாயம் பண்றீங்கன்னு கேட்டேன். எஸ்.பி உடனிருந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. சக்திவேல் 'இந்த பிரச்சனையை இதோடு விடுங்க. எஸ்.பி உங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்வாரு’ன்னு சொன்னாரு. அப்புறம் திருக்கோவிலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் வீட்ல விட்டாங்க. நாங்க புகார் கொடுத்த பிறகுதான் ஒன்பது பேர்மேல செய்யாத ஐந்து திருட்டு வ்ழக்கை சுமத்தி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைச்சிருக்காங்க.
பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டுக்கு திருக்கோவிலூர் நீதிபதி முரளிதரக் கண்ணன் விசாரிச்சுட்டுப் போனாரு. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாலு பேருக்கும் மெடிக்கல் செக்கப் நடந்தது. பிறகு திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் 30.11.2011 அன்று ஆஜர்படுத்தும்போது பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் தங்கமணின்னு ஒருத்தர் வந்து 'நாம எல்லாம் ஒரு சாதி. நான் உங்களுக்கு உதவுறேன்.நம்ம கார்ல ஏறுங்க’ன்னு சொன்னாரு. யார்னே தெரியாம, புதுசா இருக்காரேன்னு இவங்க யாரும் அவர்கூட போகல. உடனே கார்ல ஏறுங்கன்னு கை காலை புடிச்சு பலவந்தமா ஏத்த பார்த்தாரு. நாங்க ரமேஷ் சார் கூடதான் போவோம்னு அழுது அடம் பிடிச்சாங்க. கல்யாணி சார் அப்போது அங்கே பணியில் இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்திடம் புகார் செய்ததால் நடக்க இருந்த கடத்தல் சம்பவம் தடுக்கப்பட்டது.
சந்தேகக் கேசில் ஒன்பது பேரை பிடித்து செய்யாத குற்றத்தை சுமத்தியுள்ளனர். 25.11.2011 அன்று ஒன்பது பேரை பிடித்ததாக போலீஸ் தவறாக பதிவு செய்துள்ளனர். ஆனால் 22.11.2011 அன்றே பிடித்து சித்ரவதை செய்துள்ளனர். காசியின் கால் முட்டியில் சதை பிய்ந்து ரத்தம் வழிவதை கடலூர் மத்திய சிறையில் பார்த்து கலங்கிப்போனேன்.
திருக்கோவிலூர் ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர்களான தனசேகரன், கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகிய ஐந்து பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் இந்த் ஐந்து பேர்தான் சம்பந்தப்பட்டவர்களா என தெரியவில்லை. இவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை. ஆனால் பாலியல் பலாத்காரம் செய்தது நான்கு பேர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மொத்தம் எட்டுபேர். இப்படி இருக்க எப்படி ஐந்து பேரை சஸ்பென்ட் செய்ய முடியும்? பாதிக்கப்பட்ட பெண்கள் 500 பேருக்கு இடையில் இருந்தாலும் நான்கு பேரை சரியாக அடையாளம் காட்டிவிடுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கவில்லை. குற்றமிழைத்த போலீஸார் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட இருளர் பென்கள் எந்த நேரத்திலும் கடத்தப்படலாம் என்ற சூழல் இருக்கிறது. போலீஸ் துறைக்கு அவமானம் ஏற்படும் என்பதற்காக தப்பு செய்தவர்களை தண்டிக்காமல் இருப்பது நியாயமில்லை.
போலீஸுக்கு ஏ.சி அறையில் பெரிய மைதானத்தில் பயிற்சி கொடுப்பதைவிட மக்களோடு பழகி உணர்வுகளை புரியவைப்பதின் மூலமே இது போன்ற் குற்றங்களைத் தடுக்க முடியும். யாராவது தப்பு செய்தால் போலீஸிடம் போகலாம். போலீஸ் தப்பு செய்தால் எஸ்.பியிடம் போகலாம். எல்லோரும் தப்புசெய்தால் எங்கே போவது?" ஆதங்கத்தோடு கேட்கிறார் ரமேஷ்.
No comments:
Post a Comment