இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸி. அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. 3-வது டெஸ்ட் பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 161 ரன்னில் சுருண்டது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 149 ரன் எடுத்திருந்தது. வார்னர் 104 ரன்னுடனும், கோவன் 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோவன் அரைசதம் அடித்தார். அரை சதம் அடித்த கோவன் 70 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மார்ஷ் 11 ரன்னிலும், பாண்டிங் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மூன்று விக்கெட்டுகளையும் யாதவ் வீழ்த்தினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வார்னர் சிறப்பாக விளையாடி வார்னர் 150 ரன்னை கடந்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 180 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வார்னரின் விக்கெட் வீழ்ந்ததும் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
208 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. வழக்கம் போல் முன்னணி வீரர்களான காம்பீர் (14), சேவாக் (10), சச்சின் (8), லட்சுமண் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
5வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன் வீராட் கோக்லி ஜோடி சேர்ந்தார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிட் 32 ரன்களுடனும், விராட் கோக்லி 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். இவர்களது ஆட்டம் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையை தந்தது. விராட் கோக்லி அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுவரான டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் டோனி பொறுப்பே இல்லாமல் 2 ரன்னில் ஆட்டமிழந்து எரிச்சலூட்டினார்.
அடுத்து வந்த டெயிலெண்டர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி விட இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களுக்குள் சுருண்டது. இது முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 10 ரன்கள் மட்டும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோக்லி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி. அணி தரப்பில் ஹில்பெனாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதிரடியாக ரன் குவித்த ஆஸி. அணி வீரர் டேவிட் வார்னர் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment