புதுக்கோட்டையில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியனைப் பார்த்து அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த சோனா என்பவர் கட்சிக்காரனின் நல்லது கெட்டதுக்கு உதவாத நீயெல்லாம் அமைச்சரா என்று கடுமையாக சாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பின்னர் சுதாரித்துக் கொண்டு போம்மா போம்மா என்று சோனாவை விரட்டினார். கட்சிக்காரர்களும் சோனாவை அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் அமைச்சர் டாக்டர் விஜய்யுடன், மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் வாய்ப்பளிப்பதாக கூறி விட்டு சீட் தராமல் ஏமாற்றியதாக ஒரு பெண் நிர்வாகி அமைச்சருடன் மோதினார். அப்போது அமைச்சர் அப்பெண்ணை அவமரியாதை செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு அமைச்சரைப் பார்த்து ஒரு பெண், நீயெல்லாம் அமைச்சரா, அமைச்சராக இருக்கவே லாயகற்றவன் என்று ஏக வசனத்தில் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மேடை அருகே வந்தார் புதுக்கோட்டை நகர மகளிர் அணி அதிமுக நிர்வாகி சோனா. அமைச்சரைப் பார்த்து கைகளை நீட்டியபடியும், விரல்களை சுட்டியபடியும், கோபமாக பேசிய அவர், நீ தொண்டர்களை பார்ப்பதும் இல்லை; மதிப்பதும் இல்லை. நல்லது கெட்டதுக்கெல்லாம் உதவுவதுமில்லை. நீயெல்லாம் மினிஸ்டரா இருப்பதற்கே லாயக்கில்லை. புதுக்கோட்டைக்கு வந்தா கூட, கட்சி ஆபீசை எட்டி பார்ப்பதில்லை. வீட்டில் உட்கார்ந்து, வேண்டப்பட்டவர்களை மட்டும் பார்த்துவிட்டு போற உன்னை பற்றி அம்மாவிடம் புகார் சொல்லி, மினிஸ்டர் பதவியை காலி செய்றேன் பார் என்று ஆவேசமாக பேசினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அமைச்சரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் போம்மா போம்மா என்று சோனாவை விரட்டினார். பின்னர் போலீஸாரும், கட்சிக்காரர்களும் சேர்ந்து, சோனாவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஏன் இந்த கோபம், எதற்காக இந்த வசவு என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment