கர்நாடகாவில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவியை இழந்தார். லோக் ஆயுக்தா கோர்ட்டு உத்தரவிட்டதால் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சி பெற மிக முக்கிய அங்கம் வகித்த அவருக்கு தற்போது கட்சி கட்டுப்பாடு தன்கையை விட்டு போய் விட்டதில் வருத்தமும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு காய்களை நகர்த்தினார். ஆனால் சதானந்தகவுடா மேல்-சபை உறுப்பினர் ஆனதன் மூலம் எடியூரப்பாவின் மீண்டும் முதல்வர் கனவு தகர்ந்தது.
இதையடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். எடியூரப்பா நேற்று முன்தினம் தன் வீட்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து கொடுத்தார். பிறகு அவர்களிடம் பேசிய எடியூரப்பா, நீங்கள் 80 எம். எல்.ஏ.க்கள் மொத்தமாக டெல்லிக்கு செல்லுங்கள். என்னை முதல்வராக்கும்படி மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்துங்கள் என்றார். எடியூரப்பா இதோடு நிற்கவில்லை. கர்நாடகாவில் தற்போது ஆட்சி திறமையற்றதாக மாறி விட்டது. எடியூரப்பா வந்தால் தான் நிர்வாகத்தை சீரமைக்க முடியும் என்று கூறும் படியும் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் கூறி வருகிறார்.
எடியூரப்பாவின் இந்த நடவடிக்கைகள் பா.ஜ.க. மேலிட தலைவர்களுக்கு தெரிய வந்துள்ளது. எடியூரப்பாவை எப்படி அமைதிப்படுத்துவது என்று அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. மேலிடத் தலைவர்களுக்கு எடியூரப்பா திடீர் “கெடு” ஒன்றை விடுத்துள்ளார். வரும் 15-ந் தேதிக்குள் எனக்கு மிக முக்கிய பொறுப்புத் தரவேண்டும். இல்லையெனில் நான் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.
எடியூரப்பா விதித்துள்ள இந்த கெடு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் அவர்கள் எடியூரப்பாவை அடுத்த வாரம் டெல்லிக்கு வரவ ழைத்து பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது. பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் சமரசம் ஏற்படாத பட்சத்தில் எடியூரப்பா புதிய மாநில கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தன் ஆதரவு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி கொடுக்காவிட்டாலும், மாநில தலைவர் ஆக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே எடியூரப்பாவை தங்கள் பக்கம் இழுக்க முலாயம்சிங் யாதவும், சரத்பவாரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment