Tuesday, June 28, 2011

''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''


ரில் இருந்தாலும்,  வெளியூர் பறந்தாலும்... எப்போதும் செய்தியின் நாயகிதான்... த்ரிஷா. தமிழுக்கும் தெலுங்குக்கும் பறந்து திரியும் த்ரிஷாவுடன் சினி மினி மீட்டிங்...
''ஜாலியா 'மங்காத்தா’ ஷூட்டிங் முடிஞ்சது. 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'மன்மதன் அம்பு’ மாதிரி எனக்கு இந்தப் படத்தில் வெயிட்டான கேரக்டர் இல்லைதான். ஆனா, அஜீத்துக்காக ஹீரோயினா நடிக்கச் சம்மதிச்சேன். ஆக்சுவலி, அஜீத் பிரியாணி சமைச்ச அன்னிக்கு நான் ஸ்பாட்டில் இல்லை. விஷயம் கேள்விப்பட்டு, அவர்கிட்ட செல்லமாக் கோபிச்சுக்கிட்டேன். ஒரு ரகசியம் சொல்லவா? அஜீத்துக்கு பிரியாணி மாதிரி, சிக்கன் பீட்ஸாவும் சூப்பரா செய்யத் தெரியும். ஹைய்யோ... ஷாலினி கொடுத்துவெச்சவங்க!''
'' 'மங்காத்தா’ படத்துல உங்களுக்கும் அஜீத்துக்கும் முத்தக் காட்சி இருந்தது. ஆனால், அஜீத் முத்தம் கொடுக்கத் தயங்கினார்னு நியூஸ் வந்ததே?''
''முதலில், அப்படி ஒரு ஸீனே கிடையாது.  இருந்தா, அவர் ஏன் தயங்கணும்? நான் என்ன பேயா?''
''தமிழில் அடுத்த படம் எதுவும் கமிட் பண்ணாமலேயே இருக்கீங்களே?''
''தமிழில் நான் ஏற்கெனவே பண்ணின கேரக்டர்கள்தான் திரும்பத் திரும்ப வருது. ஒரே விஷயத்தை எத்தனை தடவை செய்ய முடியும்? எனக்கும் போரடிக்கும். ஆடியன்ஸுக்கும் போரடிக்கும். புதுசா ஏதாவது கேரக்டர் இருந்தா... ஓடி வந்திடுறேன். இல்லைன்னா, 'விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி மாதிரி கேரக்டருக்காக வெயிட் பண்றேன்!''
''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்களுக்குப் பதிலா எமி ஜாக்சனை நடிக்கவெச்சார் கௌதம். 'நாங்க நல்ல நண்பர்களாப் பிரியுறோம்’னு அறிவிச்சீங்க. அப்படின்னா, 'சென்னையில் ஒரு மழைக் காலம்’ படத்தோட நிலைமை என்ன?''
''நானும் கௌதமும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். நாங்க சண்டை போடவும் இல்லை. பிரியவும் இல்லை. 'சென்னையில் ஓர் மழைக் காலம்’ கௌதமின் கனவு புராஜெக்ட். அந்த ஹீரோயின் கேரக்டருக்கு நான்தான் செட் ஆவேன்னு ரொம்ப நம்புறார். ஒரு ஷெட்யூல்தான் ஷூட்டிங் போனோம். நானும் பிஸி ஆகிட்டேன். அவரும் பிஸி ஆகிட்டார். சீக்கிரமே நாங்க திரும்ப சேர்ந்ததும்... ஷூட்டிங் நடக்கும்!''
''சித்தார்த் உங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அவரும் ஸ்ருதி ஹாசனும் லிவிங் டுகெதரா இருக்காங்கன்னு நியூஸ் வந்துட்டு இருக்கு. இதுபத்தி சித்தார்த் எதுவும் சொன்னாரா?''
''சித்தார்த் என் குட் ஃப்ரெண்ட். அதுக்காக நான் அவர் பெர்சனலில் தலையிட முடியாது. அவரும் என் பெர்சனல் விஷயங்களில் தலையிடுவது இல்லை. அப்படியே அவர் ஏதாச்சும் என்கிட்ட சொல்லி இருந்தாலும், நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன். அது எங்க நட்புக்கு நான் பண்ற துரோகம்!''
''பாலிவுட்டில் அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு அத்தனை சினிமா ஸ்டார்களும் குரல் கொடுத்தாங்க. ஆனா, தென்னிந்தியாவில் யாரும் ஆதரவுக் குரல் கொடுக்கலையே?''
''மத்தவங்களைப்பத்தி தெரியாது. நான் சின்ன விஷயங்களில்தான் கவனம் செலுத்திட்டு இருக்கேன். இப்போ பீட்டா விலங்குகள் காப்பகத்தின் தூதரா இருக்கேன். விலங்குகளைக் காப்பாத்தணும்னு குரல் கொடுத்துட்டு இருக்கேன். எனக்கு ஒரு விஷயம் முழுசாத் தெரிஞ்சா தான், அதில் இறங்குவேன். பெரிய விஷயங்கள்பத்தி எனக்கு அவ்வளவாத் தெரியாது!''
''ஏன் உங்களை முன்னே மாதிரி பார்ட்டிகளில் பார்க்க முடிவது இல்லை?''
''நான் பார்ட்டிக்குப் போகாம இருக்கவே மாட்டேன். சமீபத்தில்கூட ரம்யா கிருஷ்ணன் கல்யாண நாளுக்கு பார்ட்டி கொடுத்தாங்க. ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு போய் வந்தேன். எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப முக்கியம். அதனால பார்ட்டிகளை நான் மிஸ் பண்ணவே மாட்டேன்!''

நன்றி : விகடன் 

திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் கலந்த காதல்...?கல்யாணம்...?





உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்தவர் அனில் தியாகி. இவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவருடைய மூத்த மகள் நேகா. இவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதிஷ் என்ற வாலிபருக்கும் கடந்த 6 ந் தேதி ருத்ராபூரில் திருமணம் நடைபெற இருந்தது. மணமக்கள் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், திருமணம் நடைபெறுவதற்கு முதல் நாள் நேகா தனது காதலருடன் ஓடிப்போய்விட்டார்.

அழைப்பிதழ்கள் கொடுத்து திருமணத்துக்கு உறவினர்களெல்லாம் வரத்தொடங்கி விட்ட நிலையில் மணமகள் ஓடிவிட்டதால் இரு வீட்டாரும் என்ன செய்வது என்று குழப்பம் அடைந்தனர்.


இதனால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கவும், மணமகன் உறவினர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவும், மணமகளின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் அனில் தியாகிக்கு திடீரென்று புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதே முகூர்த்தத்தில் தனது இரண்டாவது மகள் ஆர்த்தியை நிதிஷுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதை ஆர்த்தியிடம் கூறி அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது.


உடனே மணமகன் நிதிஷின் பெற்றோரை சந்தித்து இதுபற்றி அவர்களிடம் கூறினார். அவர்களும் ஆர்த்தியை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி 6 ந் தேதி அதே முகூர்த்தத்தில் நிதிஷுக்கும், ஆர்த்திக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.



தனி அறையில் முதல் இரவை மகிழ்ச்சியுடன் கழிக்க நிதிஷ் ஆயிரம் கனவுகளுடன் மிதந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஆர்த்தி அவரது தலையில் பெரிய குண்டு' ஒன்றை தூக்கி போட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

வினீத் என்பவரை தான் உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், சில நாட்களுக்கு முன் அவரை கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். அக்காள் நேகா அவளது திருமணத்துக்கு முதல் நாள் காதலனுடன் ஓடி விட்டதால் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக திருமணத்துக்கு தான் சம்மதித்ததாகவும் தனது கணவர் நிதிஷிடம் ஆர்த்தி கூறினார்.


இதைக் கேட்டு ஆடிப்போன நிதிஷுக்கு உடனடியாக என்ன செய்வது என்றே தெரியவில்லை. முதல் இரவு கனவுகளெல்லாம் கானல் நீராக மாற உற்சாகம் எல்லாம் எங்கோ பறந்து போய்விட்டது. சிறிது நேரம் யோசித்த அவர், தனக்கு ஏற்பட்ட பெரும் சோகம், அவமானத்தை தாங்கிக்கொண்டு ஆர்த்தியை சகோதரியாக ஏற்று, அவரை அவருடைய காதலருடனேயே சேர்த்து வைப்பது என்று முடிவு செய்தார்.


உடனே நிதிஷ் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி, ஆர்த்தியை தனது சகோதரியாக கருதுவதாகவும், அவரை அவரது காதலர் வினீத்துடன் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர்களும் நிதிஷின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவரது யோசனையை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நிதிஷை சகோதரனாக ஏற்கும் வகையில் அவரது கையில் ஆர்த்தி  ராக்கி' கயிறு கட்டினார்.


நடந்த இந்த விவகாரங்கள் அனைத்தையும் பின்னர் ஆர்த்தியின் தந்தை அனில் தியாகியிடம் தெரிவித்த நிதிஷின் பெற்றோர், மருமகளாக வந்த ஆர்த்தியை தங்கள் மகளாக கருதுவதாகவும், அவரை அவரது காதலர் வினீத்துடன் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் கூறினார்கள்.



ஆனால் இதை விரும்பாத அனில் தியாகி, நிதிஷ் குடும்பத்தினருடன் தகராறு செய்தாக கூறப்படுகிறது. என்றாலும் ஆர்த்தியை அவரது காதலர் வினீத்துடன் சேர்ந்து வைக்க நிதிஷும், அவரது பெற்றோரும் முயன்றனர்.

அப்போது இன்னொரு புதிய சிக்கல் ஏற்பட்டது. ஊர் அறிய இன்னொருவரை மணம் புரிந்த ஆர்த்தியை வினீத் தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

இதனால் இந்த விவகாரம் மீரட் நகர போலீசுக்கு சென்றது. இப்படி ஒரு விசித்திர வழக்கை அவர்கள் இதுவரை சந்திக்கவில்லை என்பதால், நிதிஷையும், ஆர்த்தியையும் மாவட்ட குடும்ப கவுன்சிலிங் மையத்துக்கு அழைத்து அங்குள்ள நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். "நடந்தது நடந்து விட்டது, ஆர்த்தியை அவரது காதலர் வினீத் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து விடுங்கள்'' என்று யோசனை கூறினார்கள்.


அதற்கு நிதிஷும், ஆர்த்தியும்; "நாங்கள் ஒருவரை ஒருவர் சகோதரர் சகோதரியாக ஏற்றுக்கொண்டு விட்டோம். எனவே இனி கணவன் மனைவியாக வாழ முடியாது'' என்று உறுதியாக கூறி விட்டனர்.

இதைத்தொடர்ந்து, கவுன்சிலிங் வழங்கிய ஆலோசகர்கள், வினீத்தை வரவழைத்து பேச முயன்றனர். ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வர மறுத்து விட்டார்.



இதனால், கவுன்சிலிங் வழங்கியவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்த்தி தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருக்க முடிவு செய்து உள்ளார். அவரை அவரது காதலர் வினீத் மனம் மாறி ஏற்றுக்கொள்வாரா? என்று தெரியவில்லை.

நிதிஷின் நிலைமை இன்னும் பரிதாபமானது. நிச்சயிக்கப்பட்ட நேகா கைநழுவிப் போக, அவரது தங்கை ஆர்த்தியை மணந்தார். அவரும்  அண்ணா' என்று கூறி  ராக்கி' கட்டிவிட, தனது சோகத்தையும் மறந்து அவரை காதலர் வினீத்துடன் எப்படியாவது சேர்த்து வைத்து விடுவது என்று போராடிக்கொண்டு இருக்கிறார்.


நிதிஷ் ஆர்த்தி வாழ்க்கை எப்படி அமையும் என்பதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.       


Monday, June 27, 2011

திருமண 'பாண்டில்' இணைந்த ஜேம்ஸ் பாண்ட்!

 நடப்பு 'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் கிரேக் தனது சக நடிகையான ராசெல் வேஷை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டேனியல் கிரேக் (43). தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் நடிகர். இவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ராசெல் வேஷும் சேர்ந்து ட்ரீம் ஹவுஸ் என்ற படத்தில் கணவன், மனைவியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

டேனியலும், ரேசெலும் கடந்த புதன்கிழமை நியூயார்க்கில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர் என்று டேனியலின் செய்தித் தொடர்பாளர் ராபின் பௌன் தெரிவித்தார்.

இந்த திருமணத்தில் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் ரேசெலின் 4 வயது மகன் ஹென்ரி, மற்றொருவர் டேனியலின் 18 வயது மகள் எல்லா.

டேனியல் சட்சுகி மிட்ஷெல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அன்மையில் தான் இந்த ஜோடி பிரிந்தது. இதேபோன்று ரேசெல் பிளாக் ஸ்வான் என்ற படத்தின் இயக்குனர் டாரன் அரோனோப்ஸ்கியுடன் நீண்ட காலமாக இருந்தார். அவர் தான் ஹென்ரியின் தந்தை (தலை 'லைட்டா' சுத்துதுல்ல!).

தி கான்ஸ்டன்ட் கார்டனர் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரேசெல் வேஷ் கடந்த 2005-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.




நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி விசாரணை

விமான நிலையத்திற்கு வந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மா கொண்டு வந்திருந்த பொருட்களுக்கு உரிய சுங்க வரி செலுத்தாத காரணத்தால் அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பாலிவுட் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது கை நிறைய, பை நிறைய பல்வேறு பொருட்களை அள்ளி வருகிறார்கள். ஆனால் அதற்குண்டான சுங்க வரியை மட்டும் மறக்காமல் செலுத்துவதில்லை.

இதனால் சமீப காலமாக பாலிவுட் கலைஞர்களை பிடித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது சுங்கத்துறை. பிபாஷா பாசு சமீபத்தில் இதுபோல பிடிபட்டார். இந்த நிலையில் இன்று அனுஷ்கா சர்மாவைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

டோரன்டோவில் நடந்த இஃபா விழாவுக்காக போயிருந்த அனுஷ்கா, திரும்பி வந்தபோது பல்வேறு பொருட்களுடன் மும்பைக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அதற்கான சுங்க வரியை அவர் செலுத்தவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர் கொண்டு வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.

இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன.

18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.

ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார்.

"மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?", என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.




ரஜினியின் 'அழைப்புகள்'!!

கோடம்பாக்கத்தில் இன்ஸ்டன்ட் நியூஸ் என்றால் அது ரஜினியிடமிருந்து முக்கிய திரையுலக விஐபிக்களுக்கு வரும் போன்கால்கள் பற்றியதுதான்.

கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்திருக்கிறார் ரஜினி. இப்போதைக்கு சிங்கப்பூரில் சில தினங்கள் பூரண ஓய்வில் இருக்கும் ரஜினி, அடுத்த மாதம் சென்னை திரும்பப் போகிறார். 

இந்த நிலையில் திரையுலகில் தனது நெருங்கிய நண்பர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது குருநாதர் பாலச்சந்தருக்கு போன் செய்த ரஜினி, தனது உடல்நிலை குறித்த தகவல்களைக் கூறினார். ரஜினியைப் பார்க்க சிங்கப்பூருக்கு வர விரும்புவதாக பாலச்சந்தர் தெரிவிக்க, வேண்டாம் சார். நீங்க உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் விரைவில் வந்துவிடுவேன், என்று கூறியுள்ளார்.

ஷங்கருடன்...
நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அபிமான இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்குப் போன் செய்து சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாராம் ரஜினி. சிவாஜி, எந்திரன் பட அனுபவங்கள் பற்றி இருவரும் பேசினராம். மேலும் எந்திரனுக்கு கிடைத்து வரும் விருதுகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டிருந்தாக, இயக்குநர் ஷங்கரே தெரிவித்துள்ளார்.




மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன்

பார்க்க ரொம்ப 'ரிசர்வ்டு டைப்' மாதிரி தெரிந்தாலும், பழகியவர்களிடம் இயக்குநர் செல்வராகவன் அடிக்கும் கமெண்டுகள் செம கலாட்டா ரகம்.

செல்வராகவன்-கீதாஞ்சலி திருமணம், வருகிற (ஜுலை) 3-ந் தேதி காலை 6 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, ஜுலை 4-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

தன்னிடம் உதவி இயக்குநராக இருந்து, காதலியாக மாறி இப்போது வாழ்க்கைத் துணைவியாகப் போகும் கீதாஞ்சலியுடன் காதல் மலர்ந்தது, தேனிலவு திட்டம் குறித்தெல்லாம் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார் செல்வா.

ஆரம்பத்தில், "எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. அவ்வளவுதான்", என சுருக்கமாக பிரஸ் மீட்டை முடித்த அவரிடம், மெல்ல ஒவ்வொரு நிருபராக பேச்சுக் கொடுக்க, மனம் திறந்தார் செல்வா.

"கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு. 'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். இருவருக்குமான முதல் சந்திப்பு, முதல் காதல் பரிமாற்றம் பற்றியெல்லாம் இப்போது யோசித்தால் எதுவுமே தெரியவில்லை.

என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதே கீதாஞ்சலியிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதேபோல், கீதாஞ்சலிக்கு என் மனசு பிடிக்கும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற என் மனசு அவருக்குப் பிடிக்கும்.

கீதாஞ்சலி இல்லாத வாழ்க்கையை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுக்க இனி அவங்கதான்.

மொட்டைமாடிதான்...

தேன்நிலவுக்கு எங்கே போகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். இந்த நிலையில், எங்கே தேன்நிலவு போவது? மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!!

என் மீது நம்பிக்கை வைத்து, கீதாஞ்சலி தன்னை என்னிடம் ஒப்படைத்து இருப்பதை மிகப் பெரிய பரிசாக, பொறுப்பாகக் கருதுகிறேன். என்னைப்பற்றி வந்த எந்த தவறான தகவலையும் நம்பாமல், என் மீது நம்பிக்கை முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார் அவர். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன். எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்!," என்றார்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் செல்வா - கீதாஞ்சலி!




பாலாவுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்!

இயக்குநர் பாலா, இஸ்லாமியர்களின் குர்பானியை அவமதித்துள்ளார். அவன் இவன் படத்தில் குர்பானியை அவமதிக்கும் வகையில் அவர் வைத்துள்ள காட்சிகளுக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது.

அவன் இவன் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இப்படத்தில் சொரிமுத்து ஐய்யனார் சாமியைக் கேலி செய்யும் வகையிலும், சிங்கம்பட்டி ஜமீனை அவமதிக்கும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் காட்சிகள் வைத்திருப்பதாக கூறி சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமியர்களும் பாலாவுக்கு எதிராக திரண்டுள்ளனர். இப்படத்தில் வரும் சில காட்சிகள் இஸ்லாமியர்களின் குர்பானியை அவமதிப்பதாக உள்ளதாக தேசிய லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் தேசிய லீக் சார்பில் புகார் தரப்பட்டது. அதில் குர்பானியை அவமதிக்கும் வகையிலான காட்சிகளைத் தடை செய்யக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் குர்பானியை அவமதிக்கும் வகையில் காட்சிகளை வைத்த இயக்குநர் பாலா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தேசிய லீக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.




சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கலந்து கொண்டன. அதிலிருந்து ரசிகர்கள் தேர்வு செய்த கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் மருமகன் தனுஷ் பெற்றுக் கொண்டார்.

ராவணன் படத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருதும், அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.

அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வானது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வானார்.

பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்தவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும் கிடைத்தது.

தேர்வுக் குழு என்று எதையும் நியமிக்காமல் முற்றிலும் ரசிகர்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த விருதுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.




மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுடன் சைதை துரைசாமி வழக்கு

 சென்னை கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வீடியோ ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடந்த தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நான் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து தி.மு.க. சார்பில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போதும், ஓட்டு எண்ணிக்கையின் போதும் தி.மு.க. வினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் அவர்களுக்கு துணை போய் சாதகமாக நடந்து கொண்டனர். அதிகார பலம், பண பலம், ஆள் பலம் ஆகியவற்றை கொண்டே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும்.

தேர்தல் கமிஷனிடம் சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் செலவை தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போதெல்லாம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர். சுமார் ரூ.1 கோடி அளவுக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது.

இந்த செலவு கணக்கை மு.க.ஸ்டாலின் காட்டவில்லை. மேலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வந்த போதெல்லாம் அவருக்கு பின்னால் 20 முதல் 30 கார்களில் தி.மு.க. வினர் அணி வகுத்து வந்தனர். இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானதாகும்.

மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். இப்படி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷனில் முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் துர்கா ஸ்டாலின் அத்தகைய அனுமதி எதையும் பெறவில்லை.

சென்னை மாநகராட்சி மேயர் அவருக்கு துணையாக செயல்பட்டார். கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு ஏராளமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுத்தனர். தி.மு.க. பிரமுகர்களுக்கு இதற்காக பணம் சப்ளை செய்யப்பட்டது.

கொளத்தூர் தொகுதிக்குள் ஊடுருவிய ஒரு வாகனத்தில் இருந்து ஒரு கோடியே 18 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் கூட தி.மு.க.வினரால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்ட பணம் தான்.

மே மாதம் 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்த போது தி.மு.க. பிரமுகர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது என்ற விவரம் காட்டப்படவில்லை. அதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது. 

இதை தேர்தல் அதிகாரி கவனத்துக்குகொண்டு சென்ற நான் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற வைக்க பல்வேறு வகைகளிலும் முயற்சி நடந்தது. 16-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது என்னையும், அ.தி.மு.க. நிர்வாகிகளையும் போலீஸ் துணையுடன் திட்டமிட்டு வெளியேற்றினார்கள்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியும் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் செயல்பட்டனர். ஓட்டுப்பதிவின் போதும் தேர்தல் அதிகாரி பாரபட்சத்துடன் நடந்து கொண்டார். எங்களை அவர் பூத் சிலிப் கொடுக்க அனுமதிக்கவில்லை. ஆனால் தி.மு.க. வினர் உதயசூரியன் சின்னம் பொறித்த பூத் சிலிப் கொடுக்க மனுமதித்தனர்.

தி.மு.க.வினர் நடத்திய முறைகேடுகள் பற்றி நான் கொடுத்த புகார்களை தேர்தல் அதிகாரி கண்டு கொள்ளவில்லை. எனவே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள துரைசாமி, இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களையும் தனது மனுவுடன் இணைத்துள்ளார்.




மகனை நினைத்து கதறி அழும் கனிமொழி!

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது மகனைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாராம். மகனை நினைத்து வாடி வரும் அவர் அவ்வப்போது கதறி அழுது விடுகிறாராம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டது. அதுவரை சற்று மனம் தளராமல் தைரியத்துடனும், புன்னகையுடனும் காணப்பட்ட கனிமொழி தற்போது கவலை படர்ந்த முகத்துடன் காணப்படுகிறாராம்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டதாலும், மகன் ஆதித்யாவைக் காண முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாலும், அவனை விட்டுப் பிரிந்து நீண்ட நாட்களாகி விட்டதாலும் பெரும் வருத்தத்திலும், துயரத்திலும் இருக்கிறாராம் கனிமொழி.

தனி செல்லில் தங்கியிருக்கும் கனிமொழி பெரும்பாலான நேரங்களை புத்தகம் படிப்பதிலும், எழுதுவதிலும் கழிக்கிறார். அவ்வப்போது கதறி அழுகிறாராம்.

அவரது முகம் சோகம் படர்ந்து காணப்படுவதாகவும், விரக்தியுடன் அவர் இருப்பதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அடிக்கடி அழுவதால் அவரது முகம் சோகமயமாக உள்ளதாக கூறும் அத்தகவல்கள், முன்பெல்லாம் அடிக்கடி பேசும் கனிமொழி தற்போது எப்போதாவதுதான் சக கைதிகள் அல்லது அதிகாரிகளுடன் பேசுகிறார். அப்படிப் பேசினாலும் தனது மகனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார் என்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் நிலை பரவாயில்லை என்கிறார்கள். அவர் தனது சூழ்நிலையை நன்குஉணர்ந்து புரிந்து அதற்குப் பழகிக் கொண்டு விட்டார். இயல்பான நிலையில் அவர் காணப்படுகிறார். உடற்பயிற்சி, இந்தி கற்பது, சக கைதிகளுடன் இணைந்து விளையாடுவது என்று சகஜமான நிலையில் தன்னை வைத்துக் கொண்டுள்ளார். இதனால் மன இறுக்கம் இல்லாமல் இயல்பான நிலையில் இருக்கிறார். ஆனால் கனிமொழியால் சிறை சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவர் உடைந்து போய்க் காணப்படுகிறார்.

கனிமொழிக்கு டிவியும், கேபிள் இணைப்பும் தரப்பட்டுள்ளது. அதில் 28 சேனல்கள் வருகின்றனவாம். அவ்வப்போது டிவியைப் பார்த்து பொழுது போக்கி வருகிறாராம் கனிமொழி. பெரும்பாலும் செய்திகளையே பார்ப்பாராம்.

திஹார் சிறையில் தனது மகள் உடலில் கொப்புளம் வந்து அவதிப்படுவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கூறியிரு்நதார். ஆனால் திஹார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா இதுகுறித்து கூறுகையில், தேசிய மனித உரிமை ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை திஹார் சிறையின் சூழலை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிறைக் கைதிகளின் அனைத்து அடிப்படைத் தேவைகள் குறித்தும் நாங்கள் பெரும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

எந்தக் கைதியாவது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடனடியாக உள்ளேயே உள்ள மருத்துவமனையை அணுகலாம். தேவைப்பட்டால் டாக்டர்கள் செல்லுக்கே நேரில் வந்தும் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. தங்களுக்கு தேவையான மருந்துகளை கைதிகள் நேரடியாக டிஸ்பன்சரிக்குப் போய் வாங்கிக் கொள்ளவும் அனுமதி உள்ளது. கைதிகள் தங்களது மருத்துவத் தேவைகளை சிறைக் கண்காணிபப்பாளரிடம் தெரிவித்தால் அவர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கனிமொழி ஒரு விசாரணைக் கைதி. விசாரணைக் கைதிகளுக்கு திஹார் சிறையில் எந்தக் கைத்தொழிலும் கற்றுத் தரப்படுவதில்லை. எனவே கனிமொழி மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறார் என்று மீடியாக்களில் வந்த செய்தி தவறு என்றார்.




மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு!: ப.சிதம்பரம்

நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், அமைச்சரவையில் 40 வயது, 50 வயதானவர்கள் தான் இடம் பெற வேண்டும். நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும். இளைய தலைமுறை மீதும், இளம் அரசியல்வாதிகள் மீதும் எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு என்றார்.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறி வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்துப் போவதாக சொல்லலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த சிதம்பரம், நான் அந்த விஷயத்தைப் பற்றியே பேசவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் ஒரு தலைவரைத் தருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிரதமர் பதவிக்குத் தகுதியான நபர் கிடைக்கிறார். ராகுல் காந்தி உரிய நேரத்தில் பிரதமரானால் காங்கிரஸ் கட்சி மிகவும் மகிழ்ச்சியடையும் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாட்டை 7 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆண்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பல வெற்றிகளையும் சில பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறோம். ஆனால், இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. இந்தக் கருத்தை பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன் என்றார்.

நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எனது மிச்சமுள்ள காலத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் நிறைய படிக்க விரும்புகிறேன். நிறைய பயணம் செய்ய ஆசைப்படுகிறேன். அதைவிட மேலாக எழுதவும் விரும்புகிறேன். எனக்குள் ஒரு எழுத்தாளனும் இருக்கிறார். அருந்ததி ராய் மாதிரி எழுத என்னாலும் முடியும். அருந்ததியின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடே கிடையாது, ஆனால், அவரது எழுத்து நடையை ரசிப்பவன் நான் என்றார்.

விரைவில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது உள்துறை அமைச்சர் பதவியை தொடர்ந்து வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு வேறு வழி இருக்கிறதா... எனக்கு வேறு சாய்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியது இருவர். ஒருவர் காங்கிரஸ் தலைவர். இன்னொருவர் பிரதமர். அவர்களது முடிவுகளை நான் எப்போதும் ஏற்பவன். இந்த நாளோடு நான் உள்துறை அமைச்சர் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்கள், 25 நாட்கள் ஆகிவிட்டன என்றார் சிதம்பரம்.

அமைச்சரவை மாற்றத்தின்போது சிதம்பரத்தின் இலாகாவும் மாற்றப்படக் கூடும் என்று டெல்லியில் கிசுகிசுக்கள் பரவியுள்ள நிலையில் அவரது இந்தப் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.