உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்தவர் அனில் தியாகி. இவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவருடைய மூத்த மகள் நேகா. இவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நிதிஷ் என்ற வாலிபருக்கும் கடந்த 6 ந் தேதி ருத்ராபூரில் திருமணம் நடைபெற இருந்தது. மணமக்கள் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், திருமணம் நடைபெறுவதற்கு முதல் நாள் நேகா தனது காதலருடன் ஓடிப்போய்விட்டார்.
அழைப்பிதழ்கள் கொடுத்து திருமணத்துக்கு உறவினர்களெல்லாம் வரத்தொடங்கி விட்ட நிலையில் மணமகள் ஓடிவிட்டதால் இரு வீட்டாரும் என்ன செய்வது என்று குழப்பம் அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கவும், மணமகன் உறவினர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவும், மணமகளின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் அனில் தியாகிக்கு திடீரென்று புதிய யோசனை ஒன்று தோன்றியது. அதே முகூர்த்தத்தில் தனது இரண்டாவது மகள் ஆர்த்தியை நிதிஷுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதை ஆர்த்தியிடம் கூறி அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக தெரிகிறது.
உடனே மணமகன் நிதிஷின் பெற்றோரை சந்தித்து இதுபற்றி அவர்களிடம் கூறினார். அவர்களும் ஆர்த்தியை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி 6 ந் தேதி அதே முகூர்த்தத்தில் நிதிஷுக்கும், ஆர்த்திக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
தனி அறையில் முதல் இரவை மகிழ்ச்சியுடன் கழிக்க நிதிஷ் ஆயிரம் கனவுகளுடன் மிதந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஆர்த்தி அவரது தலையில் பெரிய குண்டு' ஒன்றை தூக்கி போட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
வினீத் என்பவரை தான் உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், சில நாட்களுக்கு முன் அவரை கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். அக்காள் நேகா அவளது திருமணத்துக்கு முதல் நாள் காதலனுடன் ஓடி விட்டதால் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக திருமணத்துக்கு தான் சம்மதித்ததாகவும் தனது கணவர் நிதிஷிடம் ஆர்த்தி கூறினார்.
இதைக் கேட்டு ஆடிப்போன நிதிஷுக்கு உடனடியாக என்ன செய்வது என்றே தெரியவில்லை. முதல் இரவு கனவுகளெல்லாம் கானல் நீராக மாற உற்சாகம் எல்லாம் எங்கோ பறந்து போய்விட்டது. சிறிது நேரம் யோசித்த அவர், தனக்கு ஏற்பட்ட பெரும் சோகம், அவமானத்தை தாங்கிக்கொண்டு ஆர்த்தியை சகோதரியாக ஏற்று, அவரை அவருடைய காதலருடனேயே சேர்த்து வைப்பது என்று முடிவு செய்தார்.
உடனே நிதிஷ் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி, ஆர்த்தியை தனது சகோதரியாக கருதுவதாகவும், அவரை அவரது காதலர் வினீத்துடன் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர்களும் நிதிஷின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவரது யோசனையை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நிதிஷை சகோதரனாக ஏற்கும் வகையில் அவரது கையில் ஆர்த்தி ராக்கி' கயிறு கட்டினார்.
நடந்த இந்த விவகாரங்கள் அனைத்தையும் பின்னர் ஆர்த்தியின் தந்தை அனில் தியாகியிடம் தெரிவித்த நிதிஷின் பெற்றோர், மருமகளாக வந்த ஆர்த்தியை தங்கள் மகளாக கருதுவதாகவும், அவரை அவரது காதலர் வினீத்துடன் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் கூறினார்கள்.
ஆனால் இதை விரும்பாத அனில் தியாகி, நிதிஷ் குடும்பத்தினருடன் தகராறு செய்தாக கூறப்படுகிறது. என்றாலும் ஆர்த்தியை அவரது காதலர் வினீத்துடன் சேர்ந்து வைக்க நிதிஷும், அவரது பெற்றோரும் முயன்றனர்.
அப்போது இன்னொரு புதிய சிக்கல் ஏற்பட்டது. ஊர் அறிய இன்னொருவரை மணம் புரிந்த ஆர்த்தியை வினீத் தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
இதனால் இந்த விவகாரம் மீரட் நகர போலீசுக்கு சென்றது. இப்படி ஒரு விசித்திர வழக்கை அவர்கள் இதுவரை சந்திக்கவில்லை என்பதால், நிதிஷையும், ஆர்த்தியையும் மாவட்ட குடும்ப கவுன்சிலிங் மையத்துக்கு அழைத்து அங்குள்ள நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். "நடந்தது நடந்து விட்டது, ஆர்த்தியை அவரது காதலர் வினீத் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து விடுங்கள்'' என்று யோசனை கூறினார்கள்.
அதற்கு நிதிஷும், ஆர்த்தியும்; "நாங்கள் ஒருவரை ஒருவர் சகோதரர் சகோதரியாக ஏற்றுக்கொண்டு விட்டோம். எனவே இனி கணவன் மனைவியாக வாழ முடியாது'' என்று உறுதியாக கூறி விட்டனர்.
இதைத்தொடர்ந்து, கவுன்சிலிங் வழங்கிய ஆலோசகர்கள், வினீத்தை வரவழைத்து பேச முயன்றனர். ஆனால் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வர மறுத்து விட்டார்.
இதனால், கவுன்சிலிங் வழங்கியவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்த்தி தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருக்க முடிவு செய்து உள்ளார். அவரை அவரது காதலர் வினீத் மனம் மாறி ஏற்றுக்கொள்வாரா? என்று தெரியவில்லை.
நிதிஷின் நிலைமை இன்னும் பரிதாபமானது. நிச்சயிக்கப்பட்ட நேகா கைநழுவிப் போக, அவரது தங்கை ஆர்த்தியை மணந்தார். அவரும் அண்ணா' என்று கூறி ராக்கி' கட்டிவிட, தனது சோகத்தையும் மறந்து அவரை காதலர் வினீத்துடன் எப்படியாவது சேர்த்து வைத்து விடுவது என்று போராடிக்கொண்டு இருக்கிறார்.
நிதிஷ் ஆர்த்தி வாழ்க்கை எப்படி அமையும் என்பதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment