ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஹரிஷ் நந்தா ஷெட்டி, ஷோகான் ஷெட்டி, அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் சீனிவாசன், சாய்பாபா சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் சாய்பாபா ஆசிரமத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புட்டபர்த்தி மக்கள் கோரி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சாய்பாபா ஆசிரமம் எதிரே அவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதில் புட்டபர்த்தியில் உள்ள வியாபாரிகள், பெண்கள் அமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது, சாய்பாபா ஆசிரமத்தை உலக மக்கள் புனித தலமாக கருதுகிறார்கள்.
அப்படிப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.
தற்போதுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். நேர்மை யானவர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாகி நியமிக்க வேண்டும் என்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக சாய்பாபா ஆசிரமத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. புட்டபர்த்தி வரும்கார்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.
தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர் ராமய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகத்தின் மிகச் சிறந்த ஆன்மீகத்தலமாக விளங்கிய புட்டபர்த்தி சாய்பாபா ஆசி ரமத்தில் நடந்துள்ள ஊழல் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரம கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆசிரமத்தில் ரூ.11 கோடி அளவுக்கு பணம் இருப்பதாக சொல்கிறார்கள். இது நம்பும் படி இல்லை. எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment