படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகளாக கிருஷ்ண லீலை படம் பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதால் அதன் டைரக்டர் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் ஷங்கரிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் சூரி படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் டைரக்டர் ஸெல்வன். இவர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி இயக்கியிருக்கும் படம்தான் கிருஷ்ண லீலை. சக மனிதரின் கண்ணீரை துடைப்பனனே சாமி... என்ற சப்-டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் சூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் ஸெல்வன். படத்தை தயாரித்த கவிதாலயாவும், படத்தை வாங்கியிருக்கும் ஐங்கரனும் காரணமே இல்லாமல் என் படத்தை தாமதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஸெல்வனின் குற்றச்சாட்டு.
இதுபற்றி ஸெல்வன் கூறுகையில், கிருஷ்ண லீலை தாமதத்திற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் கேட்டால், நான் என்ன முடிவு செய்ய முடியும் ; ஐங்கரன் முடிவு செய்யும் தேதியில்தான் படத்தை வெளியிட முடியும் என்று 2 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். ஐங்கரனிடம் கேட்டால் சரியான பதில் வரவில்லை. கிருஷ்ண லீலையில் சமுதாயத்தில் நடக்கின்ற அநியாயங்களை தட்டிக்கேட்கும் நவீன கிருஷ்ணராக நடிகர் ஜீவன் நடித்துள்ளார். இந்த படத்தில் நான் சொல்லியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற, மக்கள் அவதிப்படுகின்ற, மக்கள் சந்திக்கின்ற பிரச்னைகளை சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் சமச்சீர் கல்வியை பற்றி மிக தெளிவாக, உண்மையான சமச்சீர் கல்வி எது என்பதையும் சொல்லியிருக்கிறேன். சமுதாய சிந்தனை கொண்ட கிருஷ்ண லீலையை சரியான நேரத்தில் கொண்டு வராமல் காரணமே இல்லாமல் மேலும் மேலும் கால தாமதம் செய்கிறார்கள், என்று குற்றம் சாட்டுகிறார் ஸெல்வன்.
டைரக்டர் பாலசந்தரே பலமுறை கிருஷ்ண லீலையை பாராட்டியிருக்கிறார் என்று பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில், கிருஷ்ண லீலை ரீலிஸில்தான் என் வாழ்க்கையே இருக்கிறது என்று வேதனை தெரிவிக்கிறார் ஸெல்வன். இந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த நடிகரிடமும் சென்று கதை சொல்ல முயற்சி செய்தாலும் அவர்கள் கிருஷ்ண லீலை வெளிவரட்டும் என்கிறார்களாம். இரண்டு வருடங்களாக கிருஷ்ண லீலையை நம்பியிருக்கும் தனக்கு. இந்த இரண்டு வருடங்களாக எந்தவித சம்பளமும் கொடுக்கப்படவில்லை என்று சொல்லும் டைரக்டர் ஸெல்வன், கிருஷ்ண லீலையை ரீலிஸ் செய்யக் கோரி இயக்குனர் சங்க புதிய நிர்வாகிகளிடம் முறையிடுவது, ஐங்கரன் நிறுவன அலுவலகம் முன் காலவரையற்ற உண்ணாரவிதம் மேற்கொள்வது என அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கப் போகிறாராம்.
இவரைப் போலவே படத்தின் ஹீரோ ஜீவனும் வேறு படங்களில் கமிட் ஆக முடியாமல் கிருஷ்ண லீலை ரீலிசுக்காக காத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
கிருஷ்ணலீலைக்கே கிருஷ்ணரின் லீலை!
No comments:
Post a Comment