நடிகர்கள் தனுஷ், தமன்னா நடித்து, ஹரி இயக்கியுள்ள படம் `வேங்கை'. இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் `ஏக சக்கரா' நிறுவனத்தின் இயக்குனர் கலைசெல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தொடர்ந்துள்ள வழக்கில், ''எங்கள் நிறுவனம் சார்பில் `ஊலலல்லா' என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2-வதாக `வேங்கை' என்ற படம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை புதுமுக இயக்குனர் பாலசுப்பிரமணியம் இயக்குகிறார்.
`வேங்கை' என்ற திரைப்படத்தின் பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பரில் பதிவு செய்தேன்.
இந்த நிலையில் அந்த ஆண்டில் செப்டம்பர் 28-ந் தேதி எனக்கு தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து நோட்டீசு வந்தது. `வேங்கை' என்ற பெயரை ஏற்கனவே `ஸ்ரீ புரடக்சன்' நிறுவனம் பதிவு செய்துள்ளதாக அதில் கூறியிருந்தனர். இதற்கு நான் பதில் நோட்டீசும் அனுப்பினேன்.
இந்நிலையில், `வேங்கை' என்ற பெயரில் தனுஷ், தமன்னா நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் யசோத்வரதன் ஆஜரானார். `வேங்கை' என்ற பெயரை பதிவு செய்வதற்கு முன்பு வேறு யாரும் அந்த பெயரை பதிவு செய்யவில்லை என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூறியது. எனவே `வேங்கை' என்ற தலைப்பு மனுதாரருக்கு சொந்தமானது.
எனவே `வேங்கை' படம் வெளியிடப்பட்டால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் அந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி வி.ராமசுப்பிரமணியம்,
’’மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. இந்த படம் ஜுலை 11-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியிடப்பட்டால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படும். எனவே `வேங்கை' என்ற பெயரில் படத்தை வெளியிட ஒரு வாரத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை ஜுலை 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment