எதிராளியின் பலத்தையும் சேர்த்து பறித்துக் கொள்வதுதான் வாலியின் ஸ்டைல். அவர் இராமயண வாலி என்றால், நிகழ்கால வாலியாகவே திகழ்கிறார் ரஜினி. தன்னை எதிர்த்து குரல் கொடுக்கிறவர்களை அரவணைத்து அருகில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல். ஆச்சி மனோரமாவில் ஆரம்பித்த இந்த பாணி, வடிவேலு வரைக்கும் வந்து நிற்கிறது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார் ரஜினி. அந்த சமயத்தில் அதிமுக வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த ஆச்சி மனோரமா, ரஜினியை தாறுமாறாக விமர்சித்தார். ரஜினியுடன் பல படங்களில் நடித்த மனோரமா இப்படி பேசலாமா என்று ஊர் உலகமே கரித்துக் கொட்டியது. அந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. மனோரமாவுக்கு ஒரு படமும் புக் ஆகவில்லை. ஆனால் நடந்ததை மறந்து தன் படத்திலேயே முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்து மனோரமாவுக்கு மீண்டும் திரையுலகத்தின் கதவை திறந்துவிட்டார் ரஜினி.
மனோரமாவை விடவும் மிக கடுமையாக ரஜினியை விமர்சித்தவர் டைரக்டர் வேலு பிரபாகரன். சாலையில் நடந்து போகும் அவரை கவனித்த ரஜினி, காரை நிறுத்தி ஏற்றிக் கொண்டார். உங்களுக்கு நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணும்னு நினைக்கிறேன் என்று பத்து லட்ச ரூபாயை வலுக்கட்டாயமாக அவருக்கு கொடுத்தார். அவ்வளவுதான். அன்றிலிருந்து அவர் கப்சிப்.
இதே அனுபவம் மன்சூரலிகானுக்கும் நடந்தது. முடியை கோதுகிறவன் எல்லாம் முதலமைச்சர் ஆக முடியாது என்று ரஜினியை சீண்டிக் கொண்டேயிருந்தார் மன்சூர். திடீரென ஒரு நாள் ரஜினியிடமிருந்து அழைப்பு. தான் நடிக்கும் படத்தில் முக்கிய ரோல் கொடுத்ததுடன், இதுவரை மன்சூர் வாங்காத சம்பளத்தை கொடுத்து அதிர வைத்தார். இதுதான் ரஜினியின் ஸ்டைல்.
ராணாவாவது கானாவாவது என்று ரஜினியை சீண்டிய வடிவேலுவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப் போகிறாராம் ரஜினி. தமிழ் திரையுலக புள்ளி விபரப்படி தேர்தலுக்கு பிறகு ஏழு படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் வடிவேலு. ரஜினியின் முடிவுக்கு பிறகு எல்லாமே மாறலாம்!
No comments:
Post a Comment