கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மீது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அடுக்கடுக்கான புகார்களை சுமத்தினார். இதை எடியூரப்பா மறுத்ததுடன் “தர்மஸ் தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலில் சத்தியம் செய்ய தயாரா?” என்று சவால் விடுத்தார்.
இதை குமாரசாமி ஏற்று சத்தியம் செய்யத் தயார் என்றார். இதையடுத்து இருவரும் வருகிற 27-ந் தேதி தர்மஸ்தலா கோவிலில் சத்தியம் செய்வது என்று நாள் குறிக்கப்பட்டது. இதற்காக இருவரும் 26-ந் தேதி தர்மஸ்தலா செல்ல முடிவு செய்து இருந்தனர். மறுநாள் காலை கோவிலில் மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வந்தனர்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் சிலர் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் சத்தியம் செய்யும் பிரச்சினையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் எடியூரப்பா மனம் மாறி தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
திட்டமிட்டப்படி சத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடை பெறும் என்று கூறி வந்த அவர் இப்போது இது பற்றி 26-ந் தேதி இறுதி முடிவு அறிவிப்பேன் என்று கூறினார். இதன் மூலம் எடியூரப்பா சத்தியம் செய்யும் நிகழ்ச்சியில் இருந்து பின் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே எடியூரப்பா மீது குமாரசாமி புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை டெல்லியில் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாரதீய ஜனதா ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக இருந்த போது ஒரு சிமெண்ட் ஆலை நிறுவனத்துக்கு ரூ.7 1/2 கோடி கடனை தள்ளுபடி செய்தார். அதில் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மத்திய நிதித்துறை விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகாரை முதல்-மந்திரி எடியூரப்பா மறுத்தார். தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இதற்காக குமாரசாமி மீது வழக்கு தொடருவேன் என்று அறிவித்துள்ளார். குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தனது சொந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெற வில்லை என்று கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு எடியூரப்பா பதில் அளிக்கும் போது அவரது குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என்றார்.
No comments:
Post a Comment