சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்படுகிறது. புதுமனை புகுவிழா நடத்தி குடியேறுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த `ராணா' படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் 2 முறை இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, அவருடைய மூச்சுக்குழாயில் தொற்று, நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.
அவருக்கு மேலும் நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் டாக்டர்கள் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட நோய்க்கான மூலக்காரணத்தை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. படிப்படியாக அவரது உடல்நிலை தேறியது.
கடந்த வாரம் ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இருந்து `டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இப்போது அவர், டாக்டர்கள் அறிவுரையின்படி, குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். டாக்டர்கள் தினமும் அங்கு சென்று அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் இன்னும் சில வாரங்கள் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார். அவருடைய உடல்நலனை கருதி, அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரையின்படி பார்வையாளர்கள் முக்கிய பிரமுகர்களாக இருந்தால்கூட, ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமீபத்தில் அவரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சந்தித்தாக வெளிவந்த தகவல் வதந்தி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய வீடு, ஜோதிடர்களின் ஆலோசனைப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் மாற்றி அமைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள சில பகுதிகளை இடித்துவிட்டு, வாஸ்துப்படி புதுப்பிக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும்போது, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் `புதுமனை புகுவிழா' நடத்தி குடியேற திட்டமிட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment