கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் தொழில்கள், விவசாய பணிகள் கடும் பாதிப்பு அடைந்தது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதும் தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மின்வெட்டை குறைக்க நடவ டிக்கை மேற்கொண்டார். அதன்படி மின் கட்டமைப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர் மின் நிலையங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிகரித்துள்ளது. இதனால் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு என்பது இல்லை. குறிப்பிட்ட 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப் படுகிறது.
காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் வெளியூர்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதில்லை. மின் உற்பத்தி குறையும் சமயத்தில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வருகிற 1-ந்தேதி முதல் மின்வெட்டை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை தவிர வெளியூர்களில் 3 மணி நேர மின்சார வெட்டு 1 1/2 மணி நேரமாக குறைக்கப்படுகிறது.
எனவே வருகிற 1-ந்தேதி முதல் மதுரை, கோவை, ஈரோடு, வேலூர், விழுப்புரம் போன்ற நகரங்களில் மின்சார வெட்டு 1 1/2 மணி நேரமாக குறையும்.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜூலை 1-ந்தேதி முதல் மின்வெட்டை குறைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகரித்து உள்ளது.
இது ஜூலை மாதத்தில் மேலும் அதிகரிக்கும். கோவை போன்ற நகரங்களில் தற்போது அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவதில்லை. மின் உற்பத்தி குறையும் நேரத்தில் மட்டும் குறிப்பிட்டப்படி 3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது எங்கும் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்வெட்டு அமலில் உள்ளது. ஜூலை 1-ந்தேதி முதல் 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாகவும் பின்னர் 1 1/2 மணி நேரமாகவும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கிராமப்பகுதிகளில் 6 மணி நேர மின்வெட்டும் படிப்படியாக குறைந்து விடும். முதலில் நகரப்பகுதியில் மின்வெட்டு குறைக்கப்படும். அடுத்து புறநகர்ப்பகுதியும், கிராமப்பகுதிகளிலும் மின் வெட்டு குறையும்.பிள்ளை பெருமாள் நல்லூர் மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்குகிறது. இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும், காடம்பாரை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்தும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு குறையும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment