நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று திரும்பி வந்துள்ளார். குடும்பத்தினருடன் சென்றிருந்தாலும், சிங்கப்பூரில் அனைத்து உதவிகளையும் செய்தவர் நடிகை மானு.
அவர் இது குறித்து, ‘’சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார், ரஜினியின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து, ‘ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருகிறார். அவர் இங்கு இருக்கும் வரை உடனிருந்து கவனித்துக் கொள்’ என்று கேட்டுக்கொண்டார்.
நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். மருத்துவமனைக்கு அருகிலேயே ஆர்சர்டு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு பார்த்து தந்தேன். அதில் ரஜினி மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கினர்.
மருத்துவ ரீதியாக 3 வாரங்களில் ரஜினி குணம் அடைந்துவிட்டார். முன்புபோல் சகஜநிலைக்கு வரவேண்டும் என்பதற்காக சில பயிற்சிகளை மேற்கொண்டார்.
தினமும் சிறிது தூரம் வாக்கிங் செல்வார். அந்த நேரத்தில் பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்தேன். ஆனால் பாதுகாப்பாளர்கள் தேவை இல்லை என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இருந்தாலும் அவருக்கே தெரியாமல் அவர் வாக்கிங் செல்லும்போது சிலரை ரகசியமாக பாதுகாப்புக்காக அனுப்பினோம். அதையும் எப்படியோ கண்டுபிடித்து அவர்களை உடனே விலகிக்கொள்ளும்படி கூறினார்.
ஒருநாள் இட்லி, வடை வேண்டும் என்று கேட்பார். மற்றொருநாள் மசாலா தோசை கேட்டார். சில படங்களின் டிவிடிகளை கேட்டு வாங்கி போட்டுப் பார்த்தார். ஆன்மீக அனுபவங்கள் பற்றியும், யோகாவின் சக்தி பற்றியும் என்னிடம் அடிக்கடி கூறுவார்.
ஆகஸ்ட் 2&ம் தேதி வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கும்படி கேட்டோம். அவரோ ‘சீக்கிரமே ஊருக்கு போக வேண்டும். எனது நாட்டையும், ரசிகர்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன்’ என்றார்.
அவர் சென்னை புறப்படும் கடைசி நாளான்று எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து தேங்க்ஸ் சொன்னதுடன் தனித்தனியாக எங்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.
ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. ஒரு தந்தையை உடனிருந்து கவனித்துக் கொண்ட திருப்தி எனக்கு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டு பெண் போல் என்னை நடத்தினர்.
ரஜினி மீது பல லட்சம் பேர் ஏன் பாசமாக இருக்கிறார்கள் என்று அன்றுதான் புரிந்துகொண்டேன். குடும்பத்தை நேசிக்கும் ஒரு சிறந்த மனிதர் ரஜினி’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment