`துக்ளக்' வார இதழின் 42-வது ஆண்டுவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் நரேந்திர மோடி,தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் விழா ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றது. நமது நாடு கலாசார ரீதியாக எந்த அளவுக்கு பின்னி பிணைந்துள்ளது என்பதை இந்த விழா எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில் இந்திய நாடு கலாசார மையமாக திகழ்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும். இந்த விழாவில் என்னோடு குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். கடந்த 10-ஆண்டுகளாக அவரது தலைமையில் நடக்கும் ஆட்சியின் காரணமாக ஒட்டுமொத்த குஜராத் மாநிலமே வியக்கத்தக்க அளவில் சிறப்பாக மாறி இருக்கிறது.
நானும் மோடியும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வகையான யூகங்கள் எழுந்திருக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. கட்சி அங்கம் வகிக்காவிட்டாலும் கூட தற்போது பாராளுமன்ற நடவடிக்கைகளில் எங்களுக்கு ஜெயலலிதாவின் அ.தி.மு.க. கட்சி முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
நான் கடந்த நவம்பர் மாதம் மதுரைக்கு யாத்திரைக்காக வந்திருந்தபோது நான் பயணம் இருந்த சாலையில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அகற்ற ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அது மட்டுமல்லாமல், டெல்லியில் நடந்த எனது யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரையை கட்சி சார்பில் அனுப்பி வைத்ததற்காகவும் ஜெயலலிதாவுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு மாநிலத்தில் விரைவான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போதைய சூழலில் ஜெயலலிதா, நரேந்திர மோடி ஆகியோரைப் போன்ற மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தலைவர்கள் நம் நாட்டிற்குத் தேவை. தமிழக மக்களால் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் மாற்றத்தின் அடையாளத்தை குறிப்பதாகும். அந்த வகையில், இன்று சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கும் நாள் இது. எனவே, பொங்கல் விழா இந்திய அரசியலில் இந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் ஆண்டாக அமையும்.
இன்றைய தினம் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடக்கும் ஆட்சியைப் போல ஒரு ஊழல் நிறைந்த மோசமான ஆட்சியை நம் நாடு இதுவரை பார்த்தது இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவுகள் நிலவ வேண்டும் என்று நினைப்பவர்களும் காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒன்றுசேர வேண்டும்.அந்த வகையில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து இருக்கின்றன.
இவ்வாறு அத்வானி கூறினார்.
No comments:
Post a Comment