சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்த எழிலகம் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அன்பழகன் என்ற தீயணைப்பு வீரர் பலியானார். கோட்ட அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்பு வீரர்கள் பிரபாகரன், முருகன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எழிலகம் கட்டிடத்தில் சமூக நல இயக்க அலுவலகம் செயல்பட்ட பகுதியில் பிடித்த தீயால் அந்த கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. அந்த கட்டிடத்தை இடித்து தள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் பிடிக்க தொடங்கிய தீ விடிய விடிய கொளுந்து விட்டு எரிந்தது.
காலை 6 மணியளவில்தான் தீயை கட்டுப்படுத்த முடிந்தது. சுமார் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாளில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
அலுவலக நாட்களில் இது போன்று தீ விபத்து ஏற்பட்டிருந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான பேர் உயிரிழந்திருப்பார்கள். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டிடத்தை இடிக்க திட்டமிட்டு முறைப்படி நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை சுற்றி, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்வதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வண்டிகளும் கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது.
தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் வெப்பத்தை குறைக்கும் வகையில் போலீசார் தண்ணீர் அடித்த படியே உள்ளனர். சேதமடைந்த கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேதமடைந்த கட்டிடம் குறித்து அறிக்கை அரசிற்கு தாக்கல் செய்வது குறித்தும் பழைய கட்டிடத்தை இடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கே. மோகன்ராஜ் கூறியதாவது:-
150 ஆண்டு பழமையான அரசு கட்டிடம் தீ விபத்தில் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த அரசு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து அறிக்கை அரசிடம் நாளை (18-ந்தேதி) தாக்கல் செய்யப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் சேதமடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும். வேளாண்மை துறை ஆணையரகம் அருகில் பழமை வாய்ந்த ஒரு கட்டிடம் உள்ளது.
அந்த கட்டிடம் தற்போது பயன்படுத்தப்படாமல் பழுது சரி செய்ய முடியாத நிலையில் உள்ளது. பாரம்பரியம் மிக்க கட்டிடமாக அவை கருதப்படுவதால் அவற்றை இடிக்க அரசிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது. அந்த கட்டிடம் நிலையில்லா தன்மையில் இருப்பதால் அவற்றையும் இடிக்க அனுமதி கேட்கப்படுகிறது. விரைவில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment