தேர்தல் விதமீறல் வழக்கி்ல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்ய ஆட்சேபனை கேட்டு தேர்தல் அதிகாரி செல்வமணிக்கு நோட்டீஸ் அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறி திமுக முன்னாள் அமைச்சர் குப்புசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய புவனகிரி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் ஜெயலலிதா இந்த வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். இதனால் இந்த வழக்கு 36 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ஜெயலலிதாவிடம் சமர்பிக்குமாறு மாஜிஸ்திரேட் கோமதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சங்கரன் பிடிவாரன்டை சமர்பிக்கத் தடையாணை பிறப்பிக்கக் கோரி கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி உத்திராபதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் ஜெயலலிதாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்தும், சம்மனை சமர்பிக்க தடையாணை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை துரிதமாக விசாரிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர்கள் சங்கரன், ஜெயச்சந்திரன், அருண்மொழி வர்மன் ஆகியோர் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அப்போது அவர்கள் வாதிட்டதாவது,
ஜெயலலிதாவுக்கு சம்மனே கொடுக்கவில்லை. அதை அவர் வாங்க மறுக்கவுமில்லை. அப்படி இருக்கையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கவே கூடாது. எனவே அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
அதற்கு மாஜிஸ்திரேட் கோமதி கூறுகையில், இந்த வழக்கை விசாரிக்க இன்று வரை தடை உள்ளதா என்ன? இருந்தால் அந்த தடை உத்தரவு நகலைக் கொடுங்கள் என்று கேட்டார். நகலைக் கொண்டு வரவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிடிவாரன்டை ரத்து செய்ய ஆட்சேபனை கேட்டு தேர்தல் அதிகாரி செல்வமணிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற இன்னொரு மனுவைக் கொடுத்தனர்.
No comments:
Post a Comment