தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த எழுத்தாளர், திரைக்கதை மன்னன் எனப் புகழப்படும் கே பாக்யராஜுக்கு இன்று பிறந்த நாள். திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர் பிஸியாக இருந்த காலத்தை விட, இன்று அவருக்கு கூடுதலாக வாழ்த்துகள் குவிகின்றன... இதற்கு ஒருபக்கம் மீடியா, இன்னொரு பக்கம் அவரது அருமை இன்றைய தலைமுறைக்கும் புரிந்திருப்பது!
எழுபதுகளின் இறுதியில் தொடங்கியது கே பாக்யராஜின் திரையுலகப் பிரவேசம். தமிழ் சினிமாவுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சிய இயக்குநர் பாரதிராஜாவின் முதன்மை மாணவராகத் திகழ்ந்த அவர், புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக தனது குருவின் இயக்கத்திலேயே அறிமுகமானார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அடுத்து தனது இயக்கத்தில் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தை ஆரம்பித்தார். சுதாகருடன் இன்னொரு கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் தமிழ் சினிமாவையே அவர் பக்கம் திரும்ப வைத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழாப் படங்களாக அமைந்தன. தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து 11 வெற்றிப் படங்களைத் தந்த ஒரே இயக்குநர் - ஹீரோ என்ற பெருமை பாக்யராஜுக்கே உண்டு.
திரைக்கதை எழுதுவதில் பாக்யராஜுக்கு நிகர் யாருமில்லை. ஒரு சம்பவத்தை அதன் சூழல், இயல்புத் தன்மை, மனிதர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் ஒரு தேர்ந்த நெசவாளியைப் போல நெய்து தருவதில் பாக்யராஜ் ஸ்பெஷலிஸ்ட். அவரது படங்கள் அனைத்துமே பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன.
தாவணிக் கனவுகளில், ஒரு காட்சியை உணர்வுப் பூர்வமாக உருவாக்குவது குறித்து தனது குருநாதரை வைத்தே அமைத்திருப்பார் பாக்யராஜ். அவர் எப்பேர்ப்பட்ட தேர்ந்த திரைக்கதையாசிரியர் என்பதைப் புரிந்து கொள்ள அந்தக் காட்சியே சான்று.
பெரும்பாலும் அவரது படங்கள் நகைச்சுவை இழையோட அமைந்திருக்கும். ஆனால் த்ரில்லர் கதைகள் தருவதில் மன்னன் அவர். சிறந்த உதாரணம், அனைத்து மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தின் கதை வசனம் பாக்யராஜ்தான். பின்னாளில் தானே இயக்குநராக கொடி கட்டிப் பறந்த நேரத்தில், பாரதிராஜாவுக்காக மீண்டும் ஒரு கதையை உருவாக்கித் தந்தார். அதுதான் ஒரு கைதியின் டைரி. மிகச் சிறந்த த்ரில்லர் படம் என அனைவரும் பாராட்டினர் இந்தப் படத்தை. பாக்யராஜின் வசனங்கள் அந்தப் படத்துக்கு இன்னொரு ப்ளஸ்.
இதே படத்தை, வேறொரு க்ளைமாக்ஸுடன் இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து உருவாக்கினார். அந்தப் படம் 250 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.
தனது இயக்கத்தில் அவர் உருவாக்கிய 'விடியும் வரை காத்திரு' இன்னொரு அசத்தல் த்ரில்லர்!
எல்லா வகைப் படங்களையும் எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர். அவரால் சுவரில்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள் போன்ற குடும்பப் படங்களையும் தர முடியும். ஒரு கை ஓசை, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, பவுனு பவுனுதான் போன்ற படங்களையும் தரமுடியும். முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு என சிரிப்பு எனும் சர்க்கரை தடவிய சமூகப் படங்களையும் அவரால் தர முடிந்தது.
பாக்யராஜின் முந்தானை முடிச்சு, ஜனரஞ்சக சினிமாவின் உச்சம் என்றால் மிகையல்ல. ஏவிஎம்மில் படம் செய்த முதல் வெளி இயக்குநர் என்ற பெருமையும் பாக்யராஜுக்குதான்!
இதனால்தான் அவரை தனது சினிமாவுலக வாரிசு என மேடையில் அறிவித்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
இந்த திரைக்கதை யுக்தி எப்படி அவருக்குக் கைவந்தது? என்று முன்பு அவரிடம் கேட்க்கப்படது. அதற்கு பாக்யராஜ் சொன்ன பதில்:
"எங்க டைரக்டர் பாரதிராஜா கிட்ட அன்னிக்கு இருந்த நாங்கள்லாம் கிராமத்திலிருந்து நிறைய அனுபவங்களோட வந்தோம். அந்த அனுபவங்களை வைத்துதான் திரைக்கதைகளை உருவாக்கினோம். ஆனா அதே போதும்னு நிக்கலை. அன்றாடம் வெளியில் நடப்பதை சரியாக உள்வாங்கிக் கொண்டோம். அப்படி எனக்கு வாய்ப்பு கிடைக்காத போது, எனது உதவியாளர்களை வெளியில் அனுப்பி, நாட்டு நடப்பு, அவர்களுக்கு கிடைச்ச அனுபவங்களை காட்சிகளாக்கினோம். கத்துக்கிறது ஒரு தொடர் நிகழ்வு. அது நின்னுடுச்சின்னா, எழுத வராது," என்றார்!
கே பாக்யராஜின் திரைப் பயணம் தொடர வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment