சந்திரனில் வேற்றுகிரகவாசிகள் வந்து சென்றதற்கான சில தடயங்கள் கிடைத்திருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியை தவிர மற்ற கிரகங்களில் மனிதன் அல்லது உயிர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பூமியின் துணைக்கோளான சந்திரனில் சில வேற்றுகிரக உயிரிகள் வந்து சென்ற தடயங்கள் கிடைத்திருப்பதாக சில ஆச்சரியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் பால் டேவிஸ், பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் ராபர்ட் வாக்னர் உள்ளிட்டோர் சந்திரனின் மேற்பரப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து அவர்கள் இருவரும் சேர்ந்து 'சந்திரனில் வேற்றுகிரவாசிகளின் உருவை கண்டறிதல்' என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தனர். அந்த கட்டுரையை கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி “ஆக்யா ஆஸ்ட்ரா நாடிகா” என்ற பத்திரிகையில் வெளியிட்டது.
அந்த பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது,
சந்திரனில் எடுக்கப்பட்ட சில படங்களின் மூலம் சில வேற்றுகிரகவாசிகளின் தடயங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் வேற்றுக் கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சியில் அவற்றை மிகவும் நெருங்கிவிட்டோம் என்பது தெரிய வருகின்றது. குறுகிய காலத்தில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடித்துவிடலாம்.
இதற்காக சந்திரனை பல கோணங்களில் படம் பிடித்து, மேப்பிங் செய்யும் முயற்சியில் விண்வெளியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேற்று கிரகவாசிகளின் உருவம், அடையாளம் உள்ளிட்ட தன்மைகளை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment